Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman On Vijay: சொந்த சாதியே தன்னை ஒதுக்கிவிட்டதாக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு எதுக்கு பாதுகாப்பு?
காமராஜரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அடுத்த பம்மலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, “ஒன்னுமே இல்லை, கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்லை. Z பிரிவு, Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சிரிக்காதீர்கள், சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான் பேசுவேன். ஒன்னுமே இல்லாத நபர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அப்படி துப்பாக்கி, இப்படி துப்பாக்கி என வழங்குகிறார்கள்.
அரசு பணத்தை வீணடிக்க வேண்டாம் என போலீஸ் பாதுகாப்பையே ரத்து செய்து ஒரே ஒரு வாகனத்திகல் பயணித்தவர் காமராஜர். அப்படி ஒரு தலைவன் வாழ்ந்தான் என்றால் நம்பமுடிகிறதா? வாழ்ந்தான் அவரை போன்றே இன்னொரு தலைவன் வாழ்வான். அது அவர் பேரன் சீமான் தான். வேறு யாராலும் வாழ முடியாது.
நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு:
சிலர் கேட்கலாம், சீமான் உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் இருக்கின்றன, உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்துவார்கள். டேய், நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்குடா பாதுகாப்பு. ஒரு தலைவன் தன் உயிருக்கு பயந்தால், அவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். உயிருக்கு பயப்படுபவன் எப்படி நாட்டிற்கு தலைவன் ஆக முடியும். நாட்டிற்காக உயிரையே கொடுக்க துணிந்தவர் தான் எங்கள் தாத்தன் காமராஜர். வேறு யார் அப்படி இருந்தார்கள்? எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவரது புகழை பாடிக்கொண்டே இருக்கலாம்.
”சொந்த சாதியே நிராகரித்துவிட்டது” - சீமான்
இப்படியெல்லாம் பேசுவதால் எனது சொந்தக்காரர்கள் ஓட்டு போட்டுவிடமாட்டார்கள். இந்தியாவிலேயே ஒரு அரசியல் தலைவன் சொந்த சாதியாலேயே நிராகரிக்கப்பட்ட ஒரே தலைவன் சீமான் மட்டும் தான். எனது சாதிக்காரர்கள் யாருமே போடாமல், 36 லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வந்து நிற்கிறேன். காமராஜருக்கு உண்மையான பேரனாக இருந்து ஒருவனாவது உழைக்க வேண்டும் என்றே எனது சாதிக்காரர்களே என்னை புறந்தள்ளிவிட்டனர்.” என பேசினார்.
விஜய் மீது தீவிர அட்டாக்:
ஒன்னும் இல்லாதவனுக்கு Z பிரிவு, Y பிரிவு பாதுகாப்பு என சீமான் குறிப்பிட்டது, தமிழக வெற்றிக் கழக தலைவர் மீதான மறைமுக தாக்குதலே என கூறப்படுகிறது. விஜய் மீதான விமர்சனங்களை தவிர்த்து வந்த சீமான், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகே மீண்டும் காட்டமாக விமர்சித்து வருகிறார் என நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். விஜயால் தனது இருப்பு பாதிக்கப்படும் என கருதி, திமுகவுடன் இணைந்து சீமான் பணியாற்றுவதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.





















