சின்னூர் கிராம மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம்; ரூ. 5 கோடி செலவில் போடப்பட்ட பூமி பூஜை
பல நூறு ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டுவதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளது.
சின்னூர் மலை கிராம மக்களுக்கு 5 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. பெரியகுளத்தில் இருந்து அடுக்கு வழியா கொடைக்கானல் செல்ல விரைவில் அரசு பேருந்து போக்குவரத்து துவங்கப்படும் பழனி சட்டமன்ற உறுப்பினர் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ள கெவி ஊராட்சி. இந்த ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ள சின்னூர் மலைகிராமத்திற்கு பெரியகுளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதில் இரண்டு ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டாத நிலையில் சாலை வசதியும் ஏற்படுத்தி தர முடியாத நிலையில் இருந்தது. இங்கு வசிக்கும் பழங்குடி இன மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி சாலை அமைத்து தர தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பத்து நாட்களாக ஆற்றைக் கடந்து பெரியகுளம் வர முடியாத நிலையில் மாரியம்மாள் என்ற ஆதிவாசி பழங்குடியின பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மலை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் சின்னூர் மலை கிராம மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், விளைவிக்கும் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கும், அரசு வழங்கும் இலவச அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு செல்வது உள்ளிட்ட சிரமப்பட்டு வந்தது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவும், சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் கட்டமாக 5 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் கல்லாற்றின் குறுக்கே புதிய கான்கிரீட் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் I. P. செந்தில்குமார் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மலை கிராம மக்கள் ஒன்றிணைந்து பூமி பூஜை போடப்பட்டது. மலை கிராம மக்களின் பல நூறு ஆண்டுகள் கனவாக இருந்த ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு முதல் கட்டமாக நடைபெற்ற பூமி பூஜைக்கு வெடி வெடித்து கொண்டாடியதோடு, சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பல நூறு ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டுவதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாகவும், கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்ட பின்பு சாலை அமைக்கும் பணி நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் கேட்டதற்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் மலை கிராமங்களுக்கு செல்வதற்காக சிறிய ரக பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதால் விரைவில் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் பேருந்து போக்குவரத்து துவங்கப்படும் என தெரிவித்தார்.