32 கோடியில் மீன்பிடி இறங்குதளம் - மகிழ்ச்சியில் மீனவர்கள்...!
மத்திய அரசு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும், தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சந்திரப்பாடி கிராமத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பேச்சு
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட சந்திரப்பாடி கிராமத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மீனவ மக்களுக்கு அதிக அளவிலான திட்டங்கள்
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு “ அனைவருக்குமான வளர்ச்சி” என்ற நோக்கில், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில், மீனவ மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தி, அதிக அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
32 கோடியில் மீன்பிடி இறங்குதளம்
அந்த வகையில் முன்பே மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சந்திரபாடி கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் விற்பனை மற்றும் ஏலக்கூடம் அமைக்கப்பெற்று, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து தற்போது 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சம் கன மீட்டர் அளவுக்கு கடலில் உள்ள மணற்பரப்பு ஆழப்படுத்தப்படவுள்ளது.
பரிசீலனையில் கோரிக்கைகள்
மேலும், இங்குள்ள ஆற்றின் இருபுறமும் சுமார் 320 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவரும், 60 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் துறையும் அமையவுள்ளது. இந்த மீன்பிடி இறங்குதளம் கட்டிமுடிக்கப்பெற்று பயன்பாட்டுக்கு வரும்போது, சந்திரபாடி பகுதியிலுள்ள மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் முதலைமைச்சரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து முதலமைச்சர் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்.

அநீதி இழைக்கும் மத்திய அரசு
மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். பாஜகவே தமிழகத்தின் திமுக தேர்தல் அறிக்கையை பின்பற்றுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களில் முதன்மையான திட்டம் “ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை “ திட்டம் ஆகும். 1.17 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் வழங்கி சாதனை படைத்து வருகிறார். இவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.”என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கேட்டுக்கொண்டார்.
நலத்திட்ட உதவி
தொடர்ந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மானியத்துடன் 9 பயனாளிகளுக்கு, தலா ரூபாய் 75,681 வீதம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 129 ரூபாய் மதிப்பிலான குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) முகம்மது ஷபீர் ஆலம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.






















