TN 12th Exam 2025: தமிழ்நாட்டிலேயே முதல்முறை; கணினி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வு; அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு!
இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் முதல் முறையாக பார்வைக் குறைபாடு கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கணினி வழியாகத் தேர்வு எழுத உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வகுப்பு வாரியாக பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’எந்த விதத்திலும் தவறுகள் இல்லாமல் Error Free தேர்வுகளாக நடக்க வேண்டும் எனவும் போக்குவரத்து மின்சாரம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் தேர்வுகள் நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
25.57 லட்சம் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு
10, 11, 12 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகளின்போது கேள்வித்தாள் எப்போது பள்ளிகளுக்கு வர வேண்டும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிட வேண்டும்? உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் 9,13,036 மாணவர்கள் எழுத உள்ளனர், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,21,057 மாணவர்களும், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் என 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுத உள்ளனர்.
எவ்வளவு தேர்வு மையங்கள்?
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 4,113 மையங்கள் அமைக்கப்பட உள்ளன்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் 48,426 கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 43,446 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு 44,236 கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
பறக்கும் படைகள் அமைப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,858 பறக்கும் படையினர் ஈடுபட உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்காணிக்க 4,470 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி பார்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கணினி வழியில் தேர்வெழுதும் முதல் மாணவர்
இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார். வருங்காலங்களில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வினை எழுத இந்த நிகழ்வு முன் மாதிரியாக விளங்கும்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

