New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, புதிய வருமான வரி சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று மக்களவையில், புதிய வருமான வரி சட்ட மசோதா 2025-ஐ தாக்கல் செய்தார்.
எளிமைப்படுத்தப்பட்ட மசோதா - நிர்மலா சீதாராமன்
மொத்தம் 622 பக்கங்கள் கொண்ட புதிய வருமான வரி சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துபவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிக்கலின்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய மசோதா வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த மசோதாவில், நீளமான சொற்களுக்கு பதிலாக சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதிலாக, வரி ஆண்டு என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா தெரிவித்தார்.
புதிய வருமான வரி சட்டம் எப்போது அமலுக்கு வரும்.?
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்டம், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும். அக்குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு, அடுத்த நிதியாண்டிலிருந்து இந்த புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் என தெரிகிறது.
புதிய வருமான வரி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, மக்களவை இரண்டாம் அமர்விற்காக மார்ச் 10-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

