King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டில், தேர்தல் கூட்டணி அமைக்காத பட்சத்தில், பாஜக, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பதே இல்லை என்பதும், கிங் மேக்கராக விஜய் மாறியிருப்பதும் ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.

இந்தியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடேவும், பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி-வோட்டரும் இணைந்து, தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. அதன்படி, தற்போது தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடந்தால், அதில் திமுகவிற்கே வெற்றி என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயத்தை தற்போது காணலாம்.
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக பூஜ்ஜியம்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் தவெக உடன் இணைந்து, பாஜக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுக கூட்டணிக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என்று தேர்தல் வல்லுநர்கள் கூறுவதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், இரு கட்சிகளின் வாக்குகளும் சிதறி, வெற்றி வாய்ப்பை பறிக்கும் என்று தெரியவருகிறது.
ஏற்கனவே இரு கட்சிகளும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்ட நிலையில், முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதால், அதை சரி செய்வதே முதல் வேலையாக இருக்கும். அதன் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்.
மறுபுறம், பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆகாது என்பதால், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், அண்ணாமலையேதான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் உலா வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் வரும் எதிர்ப்பு, ஊழல் மற்றும் தவறான நிர்வாக குற்றச்சாட்டுகளாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலையில் பின்னடைவு மற்றும் உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஆகியவற்றால், திமுக வலுவான நிலையில் இல்லை எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கிங் மேக்கராக மாறிய தவெக தலைவர் விஜய்
இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவருடன் கூட்டணி அமைக்கவும், பாஜக மற்றும் அதிமுக முயன்று வருகின்றன. இந்த மூன்று கட்சிகளுமே கூட்டணியில் இடம்பெறுமா என்பதும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், பாஜக தனக்கு எதிரி என்று விஜய் அறிவித்து விட்டதால், இத்தகைய கூட்டணி அமையுமா என்பதும் கேள்விக்குறிதான்.
மறுபுறம், தமிழ்நாட்டில் மாபெரும் ரசிகர் படையை வைத்துள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில், ஒரு தீர்மானிக்கும் சக்தியாக விளங்கக்கூடும் எனவும், அவருடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் சிதறும் எனவும், சி-வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காத பட்சத்தில், அது ஆளும் திமுக கூட்டணிக்கே சாதகமான முடிவுகளை கொடுக்கும் என்பதும், தவெக தலைவர் விஜய் ஒரு கிங் மேக்கராக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது. இதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டு செயல்பட்டால், கடும் போட்டி ஏற்படும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

