கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...
ஒரு குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி தூக்க வேண்டும் என்பது வரை கூட அவர்கள்தான் குடும்பத்திற்கே கற்றுக்கொடுக்கின்றனர்.

தாத்தா பாட்டி தினம் எதனால் இவ்வளவு ஸ்பெஷலாகிறது என்றால், அவர்கள் நம் மீது கொண்டிருக்கும் அன்பு அது கிட்டத்தட்ட நம் அம்மா அப்பாவின் மீதுள்ள அன்பை விட அதிகம். அவர்கள் அவர்களின் வாழ்வின் தங்கள் பேரக்குழந்தைகளை வரமாய் எண்ணி வாழ்கின்றனர்.
இயந்திர உலகம்
தற்போது உள்ள இயந்திர உலகில் அதிகப்படியான குழந்தைகள், பெற்றோர்களுடனும் மற்றும் அவர்களின் தாத்தா பாட்டிகளுடனும் நேரம் செலவிடுவதும், விளையாடுவது குறைந்து கொண்டே போகிறது. 80's, 90’s காலத்தில் குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டியின் கதைக்காக காத்திருந்தனர். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அந்த கதையையும், பாட்டையும் கேட்டே வளர்ந்தனர். இவ்வாறு வாழ்ந்ததின் மூலம் பழமையான நிறைய பண்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டது. முதியவர்களும் தனித்து விடப்படாமல் அவர்களின் இருத்தலின் முக்கியத்துவம் இருப்பதாக உணர்ந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி
ஆனால், வேலைக்காகும் படிப்பிற்காகவும் பெற்றோர்கள் குழந்தைகள் மட்டும் தனியே வளரும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த தனிமையை போக்க இரு தரப்பினருமே தற்போது மொபைல்களில் நேரத்தை செலவிட்டு, அதிலே தேவையில்லாத வீடியோக்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியில் சென்று விளையாடுவதைக் கூட விரும்புவதில்லை. இதில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என நினைத்த திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம், தாத்தா பாட்டிகள் தினத்தை கொண்டாட முடிவெடுத்து (Grandparents' Day) கொண்டாடியது.
குழந்தைகளாக மாறிய தாத்தா பாட்டிகள்
திருவாரூர் மாவட்டம் நாககுடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி முதல்வர் வல்லவன் தலைமையில் தாத்தா பாட்டிகள் தினத்தை (Grandparents' Day) கொண்டாடப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள், தங்களது தாத்தா பாட்டிகளுடன் செல்ஃபி எடுத்து, முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு தாத்தா பாட்டிகளும் தங்களின் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக நேரத்தை செலவழித்து மகிழ்வித்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாயினர்.
போட்டி போட்ட தாத்தா பாட்டிகள்
அதனைத் தொடர்ந்து தாத்தா பாட்டிகளுக்கும், குழந்தைகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் குழந்தைகள் “வரக்கூடிய காலங்களில் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தை செலவு செய்து, தினம்தோறும் ஒவ்வொரு நீதிக்கதைகள் கேட்டு, சமூகத்தில் தலை சிறந்தவர்களாக செயல்படுவோம்” என உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், செல்ஃபோன் உபயோகத்தை குறைத்து, பெற்றோர்களுடனும், தாத்தா பாட்டிகளுடனும் நேரம் செலவிட வேண்டும் என்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கருத்துகள்
இந்நிகழ்வு குறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், 'தாத்தா பாட்டிகள் தினம் பள்ளியில் கொண்டாடப்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்குள் ஒரு முன்னேற்றத்தை உருவாக்கும் வகையில் எங்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது' என்றனர்.
இது குறித்து தாத்தா பாட்டிகள் பேசுகையில், 'இந்த நாள் எங்களுக்கு புதுமையானதாக இருப்பதாகவும், தாத்தா பாட்டிகளை கொண்டாடும் வகையில் இருந்ததாகவும், பேரக் குழந்தைகளுடன் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாகவும் எங்கள் வாழ் நாளில் மறக்கமுடியாத நாளாக இருந்ததாக தெரிவித்தனர்.
தனிக்குடும்பங்கள்
தற்போதுள்ள காலத்தில் நிறைய தனிக்குடித்தனங்கள் வந்துவிட்டன. பலருக்கு ஒன்றாக இருப்பது பிடிப்பதில்லை. ஆனால் இது அவர்களுக்கு வேண்டுமானால் சவுகர்யமாக இருக்கலாம். ஆனால் தாத்தா பாட்டி இல்லாமல் வளரும் குழந்தை பலவற்றை இழக்கிறது. தாத்தா பாட்டியோடி வளரும் குழந்தைகள் தைரியமாக இருக்கின்றேனா என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அவர்கள் சொல்லும் கதைகளில் உள்ள நீதி மூலம் அவர்கள் வாழ்க்கையில் அறத்தை கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை தனிமையில் விடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் வளர வளர எப்போதும் கலகலப்பாக இருக்கும் மனிதராகிறார்கள். தாத்தா பாட்டிக்களால் இவ்வளவு வேலை நம் வீட்டில் செய்கிறார்கள் என்று நாம் அறிவதே இல்லை. அவர்கள் அந்த வீட்டை பக்குவப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதனை நாம் அவர்கள் போன பின்பு தான் அறிகிறோம். அதனால் ஒரு நன்றி சொல்லி அவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள், அனுதினமும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

