தெரு நாய்களுக்கு உணவளித்ததற்காக பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் அபராதம்!
மும்பையில் தெரு நாய்களுக்கு உணவளித்ததற்காக குடியிருப்பு விதிகளை மீறியதாக பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தெரு நாய்களுக்கு உணவளித்ததற்காக குடியிருப்பு விதிகளை மீறியதாக பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஷீவுட் எஸ்டேட் என்.ஆர்.ஐ காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு உள்ளது. பாம் பீச் சாலையில் உள்ள என்ஆர்ஐ வளாகத்தில் 5,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். மேல்தட்டு குடியிருப்பு காலனியாக கருதப்படும் இங்கு நாய்களுக்கு உணவளிக்க குடியிருப்பு நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் குடியிருப்புவாசிகள் அதன் விதிகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால் பல்வேறு சேவைகளை நிறுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.
சீவுட்ஸில் உள்ள விதிகளின்படி, வளாகத்தில் விலங்குகளுக்கு உணவளிப்பதைக் கண்டறிந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இரண்டாவது விதிகளை மீறினால் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குடியிருப்புவாசிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், கால்நடைகளுக்கு உணவளிப்பவர்களில் சிலர், கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக லட்சக்கணக்கில் அபராதங்களை பெற்றிருந்தாலும், சண்டைக்கு தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் நாய்களுக்கு உணவளித்ததற்காக அன்சு சிங் என்ற பெண்ணிற்கு குடியிருப்பு நிர்வாகம் ரூ. 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அன்சு சிங் கூறுகையில், “குடியிருப்பு வளாகத்தில் கால்நடைகளுக்கு உணவளித்ததற்காக எனக்கு ரூ.7 லட்சம் பில் கொடுக்கப்பட்டுள்ளது. நான் நிர்வாகத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன். இந்த காம்ப்ளக்ஸில் இரண்டு நாய்கள் உள்ளன. அவை மிகவும் வயதானவை. அவை அதுகளுக்கான உணவை வெளியில் சென்று தேடி சாப்பிடுவது மிகவும் சிரமம். நான் அவைகளுக்கு உணவு அளிக்கவில்லை என்றால் அவை இறந்து விடும். மேலும் நாய்களுக்கு உணவளித்த மற்றொரு உறுப்பினர் மோனா சிங்கிற்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து லீலா சர்மா கூறுகையில், “நாய்களுக்கு உணவளித்ததற்காக எனக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனக்கு 60 வயதாகிறது. நான் தினமும் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று நாய்களுக்கு உணவளித்து பார்த்துக்கொள்கிறேன். அதில் என்ன தவறு?” என கேள்வி எழுப்பினார்.
நாய் பிரியர்களுக்கு உதவ முன் வந்த வழக்கறிஞர் சித் வித்யா கூறுகையில், “இந்திய விலங்குகள் நல வாரியத்தின் கூற்றுப்படி, ஒரு பகுதியில் வாழும் எந்த விலங்குகளையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. கால்நடைகளுக்கு உணவளித்தற்காக அபராதம் விதிப்பது சட்டத்திற்கு புறம்பானது. விலங்குகள் நல வாரியத்திடமும் சங்கத்தின் மீது புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து என்.ஆர்.ஐ காம்ப்ளக்ஸ் தலைவர் வினிதா ஸ்ரீநந்தனிடம் கேட்டபோது, “விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக, சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை உருவாக்கியுள்ளோம். விலங்குகளைக் காப்பாற்ற, நாங்கள் வெவ்வேறு விதிகளை உருவாக்கினோம். உறுப்பினர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.