Vijay vs Vishal : ’விஜய் எதிராக விஷால் போட்டி?’ உதயநிதி பக்கா ஸ்கெட்ச்..!
’விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க வைக்கும் வேட்பாளரை வைத்து விஜயை தோற்கடிக்க சகல முயற்சிகளையும் எடுக்கும் முடிவில் இருக்கிறது திமுக’

வரும் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது மற்ற தேர்தல்களைவிடவும் சவால் நிறைந்த தேர்தலாக இருக்கும் என்கிறார்கள் அரசியலை உற்று நோக்கும் விமர்சகர்கள். குறிப்பாக, இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியில் இருப்பதால், யாருடைய வாக்க்குகளை அவர் பிரிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக, தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை பிடித்தது இல்லை என்ற பெயரை மாற்றுவதற்காகவும் இந்த முறை முன்கூட்டியே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது திமுக. ஓரணியில் தமிழ்நாடு, இல்லம் தேடி ஸ்டாலின் என பல்வேறு திட்டங்களை போட்டு மக்களை கவரும் பணியில் களமாடிக்கொண்டிருக்கிறது அந்த கட்சி.
விஜய்க்கு எதிராக விஷால் ?
இப்படியான சூழலில் விஜயையும் எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு உருவாகியிருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் ரஜினி கட்சித் தொடங்கியிருந்தால் அதையும் திமுக எதிர்கொண்டிருக்க வேண்டிய சூழல் வாய்த்திருக்கும். ஆனால், ரஜினியே அதை செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். ஆனால், விஜய் இப்போது கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அவர் நிற்கும் தொகுதியில் சினிமா ஸ்டார் ஒருவரையே நிற்க வைத்து விஜயை தோற்கடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக, நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷாலை, தமிழக வெற்றிக் கழக விஜய்க்கு எதிராக களமிறக்க திமுக வியூகம் வகுத்துவருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஷாலும் உதயநிதியும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில், விஷாலை விஜய்க்கு எதிராக பயன்படுத்தலாம் என்று உதயநிதிக்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறிய நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தற்போது அனல்பறக்க நடைபெற்றிருப்பாதாக தெரிகிறது.
அரசியலுக்கு வரும் ஆசையில் விஷால்
ஏற்கனவே அரசியல் ஆசையில் விஷால் செயல்பட்டு வரும் நிலையில், அவர் திமுகவில் இணைந்தால் எந்த வித கஷ்டமும் இன்றி செயல்படலாம் என்பதும் விஜயை எதிர்த்து போட்டியிடுபவர் என்ற மைலேஜ் கிடைக்கும் என்பதாலும் விஷாலும் இந்த டீலுக்கு ஒத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
விஜயை தவிர வேறு தலைவர்கள் இல்லாத கட்சி
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை அந்த கட்சி தலைவரான விஜயை தவிர, சொல்லிக் கொள்ளும் வகையிலும் மக்களுக்கு பரிட்சியமான வகையிலும் வேறு ஒருவர் கூட இல்லாத சூழலில், மற்ற தொகுதிகளில் எப்படியும் விஜய் கட்சிக்கு பெரிதாக ஓட்டு விழாது என்பதை கணித்துள்ள திமுக, விஜய் நிற்கும் தொகுதி எது என்பதை தெரிந்துக்கொள்ள இப்போதே ஆர்வம் காட்டி வருகிறது. அப்படி விஜய் எந்த தொகுதில் நின்றாலும் அவரை தோற்கடிக்க எல்லா விதமான உத்திகளையும் திமுக கையாளும் என்பதும் அவர் திமுகவிற்கு ஒரு பொருட்டே கிடையாது என்பதை மக்களுக்கு நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்பதும் இந்த தேர்தலில் கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கப் போகிறது.
அதே நேரத்தில், விஜயை தேர்தல் நேரத்தில் அட்டாக் செய்ய திரைத்துறையை சேர்ந்த வாகை சந்திரசேகர், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் திமுக இப்போதே வியூகம் வகுத்து வருகிறது. திரைத்துறையை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் தலைமையில் ஒரு டீமே விரைவில் அமைக்கப்படவுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















