Top 10 News: மது இல்லாத திருமணத்திற்கு கிஃப்ட், இந்திய தடகள சம்மேளனத்திற்கு புதிய தலைவர் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

துணை முதலமைச்சர் உறுதி
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம். எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி உறுதியளித்தார்.
அதிமுக நூதன எதிர்ப்பு
"டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்" என்ற வாசகத்துடன் கூடிய முகக் கவசத்தை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ள அதிமுக உறுப்பினர்கள். சுரங்கத்திற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அதிமுக இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கியுள்ளது.
இஸ்ரோ தலைவரான தமிழர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 14ம் தேதி பொறுப்பேற்க உள்ள இவர், இரண்டு ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார். நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிற்கு புதிய அலுவலகம்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வரும் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோட்லா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்திற்கு ‘இந்திரா காந்தி பவன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மதுவிற்கு எதிராக கிராம நிர்வாகம் எடுத்த அசத்தல் முன்னெடுப்பு!
பஞ்சாப்: பதிண்டா மாவட்டத்தில் உள்ள பலோ கிராமத்தில் திருமணங்களில் மது விருந்து வைக்காமல், டிஜே இசை இன்றி நிகழ்ச்சியை நடத்தும் வீட்டாருக்கு ₹21,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு. வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும், சுப நிகழ்ச்சிகளில் ஏற்படும் | சண்டைகளை தவிர்க்கவும், மதுவை ஒழிக்கும் ஒரு முயற்சியாகவும்| இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் அறிமுகமானது OnePlus 13 Series
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus 13 மற்றும் OnePlus 13R வரும் 10ம் தேதி முதல் விற்பனை. OnePlus 13-ன் ஆரம்ப விலை ₹69,999 ஆகவும், 13R-ன் ஆரம்ப விலை ₹42,999 ஆகவும் நிர்ணயம். OnePlus, Amazon தளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கனடா அதிபராகிறாரா இந்திய வம்சாவளி?
கனடாவின் அடுத்த பிரதமராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகிய நிலையில், மூத்த அமைச்சரான அனிதாவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
பலி எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக உள்ள திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ள நிலையில், 188 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது.
இந்திய தடகள சம்மேளனத்திற்கு புதிய தலைவர்
இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக, ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பகதூர் சிங் சாகூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த அவருக்கு 51 வயது. முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், திடீரென போட்டியிலிருந்து ஒதுங்கியதால் பகதூர் சிங் போட்டியின்றி தேர்வானார்.
லக்ஷயா சென் தோல்வி
மலேசியாவில் நடந்து வரும் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்தியாவின் லக்சயா சென் வெளியேறி உள்ளார். 32 பேர்களுக்கான சுற்றில் சீன தைபேவின் சீ யூ-ஜென் என்பவரை எதிர்த்து விளையாடின, 14-21, 7-21 என்ற செட் கணக்கில் சென் தோல்வியுற்றார்.

