African swine fever: மீண்டும் கேரளாவில் புதிய வைரஸ்... மெல்ல அடியெடுத்து வைத்த ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல்!
கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் சின்சுராணி தகவல் தெரிவித்துள்ளார். பன்றிகளிடம் பரவும் இந்த வகை வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்றும், கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளிலும் தீவிர கண்காணிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்வதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
#JUSTIN | கேரளாவில் ஆப்ரிக்கன் ஸ்வைன் காய்ச்சல் பாதிப்பு https://t.co/wupaoCQKa2 | #Kerala #AfricanSwineFever pic.twitter.com/xxmWcn7yVs
— ABP Nadu (@abpnadu) July 22, 2022
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கடந்த வாரம் ஐந்து பன்றிகள் இறந்ததையடுத்து, வயநாட்டில் உள்ள தவிஞ்சல், கனியாரத்தில் உள்ள பண்ணையில் இருந்து மாதிரிகள் கால்நடை பராமரிப்புத் துறையால் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள ஆய்வகம் மூலம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டது.
இந்த தொற்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், பாதிக்கப்பட்ட பன்றியுடன் தொடர்பு கொள்ளும் கால்நடைத் தொழிலாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் இந்த தொற்றுநோயை பரப்பலாம். இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று முதன்முதலில் ஆப்பிரிக்காவில் 1920 இல் விலங்குகளில் கண்டறியப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாத சாலைகள் அல்லது பாதைகள் மூலம் மாநிலத்திற்குள் பன்றிகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள், மோட்டார் வாகன துறை மற்றும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த பத்தாண்டுகளில் பன்றி வளர்ப்பு வளர்ச்சி கண்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் புள்ளியியல் பிரிவின் 20வது கால்நடை கணக்கெடுப்பில் கேரளாவில் 2012ல் 55,782 விலங்குகளில் இருந்த பன்றிகளின் எண்ணிக்கை 2019ல் 1,03,863 விலங்குகளாக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்