Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
MDMK Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின்பேரில் பத்திரிகையாளர்கள் மீது அந்த கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MDMK Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின்பேரில் அந்த கட்சியினர் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.
வைகோ நிகழ்ச்சியில் கலைந்த கூட்டம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் தான், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் மண்டபத்தில் நெல்லை மண்டல மதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த கூட்டத்தில், வைகோ வழக்கம் போல தமிழ் இலக்கியங்களையும், தனது அரசியல் பயணத்தையும் குறிப்பிட்டு நீண்ட நெடிய வீர உரையை நிகழ்த்தினார். ஆனால், இதை முற்றிலுமாக கேட்க பொறுமை இல்லாமல் மதிமுக கட்சித் தொண்டர்கள் கொத்து கொத்தாக அரங்கத்தில் இருந்து வெளியேற தொடங்கினார்.
காலி சேர்களால் வைகோ வருத்தம்:
தொண்டர்கள் அடுத்தடுத்து வெளியேற அரங்கத்தில் இருந்த பாதிக்கும் அதிகமான நாற்காலிகள் காலியாக காட்சியளித்தன. இது ஒருபுறம் வைகோவிற்கு வருத்தமளிக்க, தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் ஆவேசமடைந்துள்ளார். செய்தியாளர்களை ”காலிப்பயல்கள்” என்று திட்டி வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மேலு, கேமராவில் உள்ள பிலிம் ரோல்களை எல்லாம் உருவுங்கள் என்றும் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. pic.twitter.com/pimGzZXh4u
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) July 9, 2025
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:
வைகோவின் தூண்டுதலை அடுத்து மதிமுகவினர் செய்தியாளர்களிடமிருந்து கேமராக்களை பிடுங்க முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சில செய்தியாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அப மேடையிலிருந்த வைகோ, செய்தியாளர்களை தாக்க வேண்டாம் என மைக்கில் அறிவுறுத்தினார். மேலும், “வைகோ பேசிக் கொண்டிருக்கும்போது கட்சிக்காரர்கள் சாப்பிட கிளம்பி விட்டார்கள். சேர்கள் காலியாக இருந்தது' என்று படத்துடன் நாளை எல்லோரும் செய்தி போடுவார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயந்தவர்கள் கிடையாது” என வைகோ சூளுரைத்தார். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து செய்தியாளர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது வைகோவின் தூண்டுதலின் பேரில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தியாளர்கள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வைகோவிற்கு குவியும் கண்டனங்கள்:
மதிமுகவினரின் தாக்குதலில் காயம் அடைந்த செய்தியாளர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வைகோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், “தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.





















