Rajasthan Hospital: யார்ரா நீங்க? குழம்பிய அரசு மருத்துவர்கள் - மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை - ஷாக்கில் குடும்பம்
Rajasthan Hospital: ராஜஸ்தானில் காயம்பட்ட மகனுக்கு பதிலாக அவரது தந்தைக்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan Hospital: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மருத்துவர்கள் தந்த அதிர்ச்சி..
மருத்துவத்துறையில் நிகழும் ஒரு சிறு தவறு உயிரையே பறிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. இதனால் தான் மருத்துவ சிகிச்சையின் போது பொறுமை, தெளிவு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான், இதற்கு நேர் அதிரான அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே விபத்தில் காயமடைந்த தனது மகனுக்காகக் காத்திருந்த தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததாக குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
மணீஷ் என்பவர் விபத்தில் காயமடைந்து கோட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இதனால், பார்த்துக்கொள்ள யாரும் இன்றி வீட்டில் தனியாக உள்ள பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை பணியாளர்கள் மணீஷை அறுவை சிகிச்சைக்காக தயார்படுத்திக்கொண்டிருக்க, அவரது தந்தை அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருந்தார்.
தந்தைக்கு அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை முடிந்து மணீஷ் வெளியே வந்தபோது, அவரது தந்தைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசும் அவர், “ நான் எனது தந்தையை வெளியே அமர்ந்து காத்திரும்படி சென்றேன். வெளியே வந்த் பார்த்தால் அவரது உடலில் தற்போது 5 முதல் ஆறு தையல்கள் உள்ளன. என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை” என பேசியுள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
யார் அந்த டாக்டர்?
சம்பவம் தொடர்பாக பேசிய மணீஷின் தந்தை ஜெகதீஷ், “எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் பெயர் எனக்கு தெரியவில்லை. மகனுக்கு உதவ வந்த நானும் இப்போது இந்த நிலையில் படுத்துகிடக்கிறேன். நான் என்ன செய்வது” என வேதனை தெரிவித்துள்ளார்.
தவறு நடந்தது எங்கே?
இந்தி நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “ மணீஷின் தந்தை ஜெகதீஷ் அதே பெயரை கொண்ட வேறு நோயாளிக்கு பதிலாக தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜெகதிஷ் என்ற பெயரை குறிப்பிட்டு மருத்துவர்கள் அழைக்க, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சரியாகப் பேச முடியாத மணீஷின் தந்தை, அவர்கள் தன்னை தான் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து கையை உயர்த்தியுள்ளார். உடனே வேறு எந்தவொரு விசாரணையும் இன்றி, அடிப்படை தகவல்களையும் ஆராயாமல் மருத்துவர்கள் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, ஏதோ குழப்பம் நடந்து இருப்பதை உணர்ந்துள்ளனர். எனவே, கிழிக்கப்பட்ட பகுதியில் தையல் போட்டு, அவரது மகனின் வார்டுக்கு அருகில் அவரை விட்டுச் சென்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் சொல்வது என்ன?
சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும், அவர்கள் 2-3 நாட்களுக்குள் சம்பவம் தொடர்பாக அறிக்கையை சமர்பிப்பார்கள் என்றும், கோட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கீதா சக்சேனா விளக்கம் அளித்துள்ளார்.

