போன் பேசிக்கொண்டு வந்த இளம்பெண்ணை சுத்துப் போட்ட தெருநாய்கள்! கைகோர்த்த பெண்கள்! வைரலாகும் வீடியோ
போன் பேசிக்கொண்டு நடந்த வந்த இளம்பெண்ணை கூட்டமாக வந்த தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி கடித்தன.

போன் பேசிக்கொண்டு நடந்த வந்த இளம்பெண்ணை கூட்டமாக வந்த தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி கடித்தன. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் அல்வாரில் மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த 18 வயது இளம்பெண்ணை தெருநாய்கள் கூட்டமாகத் தாக்கியது. இந்த சம்பவம், அவர் நடந்து சென்ற தெருவில் உள்ள ஒரு வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நவ்யா என அடையாளம் காணப்பட்ட அந்த இளம்பெண், ஆல்வாரின் ஜே.கே. நகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டத்தட்ட 10 தெருநாய்கள் அவளை நோக்கி ஓடி வந்து, சூழ்ந்து கொண்டு, குறைந்தது எட்டு முறை கடித்து, பின்னர் தரையில் இழுத்து தள்ளின.
வைரலாகும் வீடியோவில், நாய்கள் நவ்யாவை தாக்கும்போது அவள் கத்துவதைக் காணலாம். இரு சக்கர வாகனத்தில் வந்த வேறு ஒரு பெண், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் நாய்களை விரட்டி அடிக்கிறார்.
இதுகுறித்து நவ்யா கூறுகையில், “நாய்கள் என்னை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டன. நான் அவைகளைத் தள்ளிவிட முயன்றேன். ஆனால் அவைகள் என்னை முன்னும் பின்னும் இழுக்கத் தொடங்கின. நான் தரையில் விழுந்தேன். அப்போது நாய்கள் என்னைத் தொடர்ந்து தாக்கின. அதை நினைத்து நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்" என்று கூறினார்.
வீடியோவின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வீடியோ லிக்ங் இங்கே : https://x.com/Khabar_raj/status/1898263419742306661
தெருநாய்கள் தொல்லை தொடர்பாக நகராட்சி நிறுவனத்திடம் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் கவுன்சிலர் ஹெத்ராம் யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் பலமுறை நகராட்சி நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான சம்பவங்கள் நிகழக்கூடும். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களில் நாய்கள் தாக்கியதில் ஒரு குழந்தை இறந்துள்ளது, மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட கிராமங்களான ஷிவ்பூர் மற்றும் மஹ்சி தொகுதிகளில் அதிகாரிகள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களை எச்சரிக்கின்றனர், மாலையில் வெளியே செல்லும்போது குச்சிகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைகளை தனியாக வெளியே செல்ல விட வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தும் மாவட்ட நீதிபதி மோனிகா ராணி அறிவுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

