இந்திக்கு நோ சொன்ன மராத்தியர்கள்.. மும்மொழி திட்டத்தில் பின்வாங்கிய பாஜக.. வெளியான புது அறிவிப்பு
அனைத்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாவது மொழியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாவது மொழியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாய மொழியாக இந்தி இருக்காது என்றும் ஆனால் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாய மொழியாக இருக்கும் என்றும் அம்மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்திக்கு நோ சொன்ன மராத்தியர்கள்:
புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியை திணிப்பதாக தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம், மகாராஷ்டிராவில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய மூன்றாவது மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில் வழக்கமான மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என நேற்று (செவ்வாய்கிழமை) திருத்தப்பட்ட அறிவிப்பு ஒன்று வெளியானது.
மும்மொழி திட்டத்தில் பின்வாங்கிய பாஜக:
பிரதான எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணியிடமிருந்தும், ஆளும் பாஜகவுடன் நல்லுறவை பேணி வரும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. நேற்றைய திருத்தப்பட்ட அறிவிப்பில், இந்தி 'கட்டாயமாக' இருக்காது என்றும், ஆனால் அது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 'பொதுவாக' கற்பிக்கப்படும் மூன்றாம் மொழியாக இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை கூறியிருந்தது.
பெரும் எதிர்ப்பை தொடர்ந்து, 'பின்கதவு' வழியாக இந்தியை கொண்டு வர முயற்சிப்பதாக மராத்தி அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
வெளியான புது அறிவிப்பு:
இதுகுறித்து மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் கூறுகையில், "அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மராத்தி மட்டுமே கட்டாய மொழியாக இருக்கும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்திருக்கிறார். இருப்பினும், மாணவர்கள் விரும்பினால் பிற மொழிகளைத் தேர்வு செய்யலாம்.
இருப்பினும், ஒரு வகுப்பில் வேறு மொழியைக் கற்க விரும்பும் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் இருக்க வேண்டும். அந்த வரம்பு எட்டப்பட்டால், பள்ளி அந்தப் பாடத்தை கற்பிக்க செய்யும்" என்றார்.





















