Grand Vitara CNG: எல்லாரும் ஓரம் போங்க; புதிய கிராண்ட் விதாரா CNG-ஐ களமிறக்கிய மாருதி - விலை, மைலேஜ் என்ன தெரியுமா.?
Maruti Grand Vitara CNG: மாருதியின் கிராண்ட் விதாரா எஸ்யூவி காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது மாருதி. இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசுகி, அதன் நம்பர் 1 ஹைப்ரிட் எஸ்யூவி காரான கிராண்ட் விதாராவின் சிஎன்ஜி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நெக்சா மூலம் விற்கப்படும் இந்த மாடலில், பல பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.
புதிய கிராண்ட் விதாரா சிஎன்ஜி-யில் என்ன சிறப்பம்சங்கள்
மாருதியின் கிராண்ட் விதாரா கார் ஏற்கனவே நல்ல மைலேஜை வழங்கிவரும் நிலையில், தற்போது பெட்ரோலைவிட மிகவும் விலை குறைவான சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் வகையில், புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளது.
இந்தியாவில், கிராண்ட் விதாரா விற்பனையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு, புதிய பதிப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது மாருதி. இந்த கார், ஏற்கனவே இருந்ததுபோலவே, டெல்டா மற்றும் ஜீடா ட்ரிம்ஸ் ஆகிய இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். 13.48 லட்சம் மற்றும் 15.62 லட்சம் (ex-showroom) விலைகளில் கிடைக்கின்றன.
இந்த கிராண்ட் விதாராவின் புதிய பதிப்பின் இரண்டு மாடல்களிலுமே, பாதுகாப்புக்காக 6 ஏர் பேகுகளை கொடுத்துள்ளது மாருதி. மற்ற விஷயங்களில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், ஏற்கனவே இருந்த 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளில், 88 ஹெச்பி மற்றும் 121.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும்.
5 வேகங்களுடன் கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள இந்த கார், 1 லிட்டர் சிஎன்ஜி-க்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் தொடுதிரையுடன், வொயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் வருகிறது.
முன்பக்க இருக்கைகளில் காற்று வரும்படியான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற ஏசி வென்ட்டுகள், தானாக மூடிக்கொள்ளும் சைட் வியூவ் கண்ணாடிகள் என பல அம்சங்களுடன் வருகிறது புதிய கிராண்ட் விதாரா சிஎன்ஜி.
பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர் பேகுகளுடன் சேர்த்து, இபிஎஸ், ஹில் ஹோல்ட் உதவி, EBD உடன் கூடிய ABS ப்ரேக்குகள், டயர் காற்றை கண்காணிப்பது, முன் மற்றும் பின்புற டிஸ்க் ப்ரேக்குகள், ரியர் வியூவ் கேமரா, குழந்தைகள் அமருவதற்கான சீட் ஹோல்டர் போன்ற அம்சங்களும் புதிய கிராண்ட் விதாராவில் உள்ளன.
மாருதி சுசுகியின் கிராண்ட் விதாரா பெட்ரோல் மாடலே நல்ல விற்பனையை கொடுத்த நிலையில், தற்போத சிஎன்ஜி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு என்பதால், இந்தி புதிய கிராண்ட் விதாராவின் விற்பனையும் நன்றாகவே இருக்கும் என மாருதி நம்புகிறது.




















