சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: 27,600 கோடியில் ECR கடல்வழி மேம்பாலம்! விரைவில் தொடக்கம்
Ennore- Poonjeri Sea Bridge: எண்ணூர் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை 27,600 கோடி ரூபாயில், 92 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மார்க்கமாக இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 27,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்வழி மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் தலைநகரம்
தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை, போக்குவரத்து நெரிசல்கள் நிறைந்த நகரமாக இருந்து வருகிறது. இன்றைய சூழலிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது, எதிர்காலத்தில் இதைவிட அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மற்றும் எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை எல்லை சாலை திட்டம் - Chennai Peripheral Ring Road (CPRR)
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை சென்னை எல்லைச்சாலை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்ற வருகின்றன. இந்த சென்னை எல்லைச்சாலை திட்டம் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைக்கும் வகையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் கீழ், மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், தச்சூர், தண்டலம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகிய முக்கிய இடங்கள் இணைக்கப்பட உள்ளன. இது இந்தியாவில் மிக முக்கிய சாலை திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
கடல்வழி மேம்பாலம் திட்டம் (ECR Sea Flyover)
இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை 92 கிலோமீட்டர் தூரத்திற்கு, கடல்வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை, கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்திய கூறு அறிக்கையை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோராயமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.
பணிகள் நடைபெறுவது எப்படி ?
மூன்று கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 5400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது கட்டமாக 13 ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிற்கு செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of ECR Sea Bridge
இந்த திட்டம் கடல் வழிபாலமாக அமைக்கப்பட உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு மற்றும் கடல் வளம் பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாலம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்படுத்தும் போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
ஏற்கனவே மும்பை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள கடல்வழி மேம்பாலத்தை முன்னுதாரணமாக எடுத்து, இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகரிப்பதுடன், தொழில் வளத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.





















