அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
Mahakumbh Mela 2025 Ends: பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கான கடைசி நாள் என்பதால், கோடிக் கணக்கான மக்கள் குவிந்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ்ஜில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளாவானது, இன்றுடன் முடிவடையும் நிலையில், கடைசி நாளில் திரளான பக்தர்கள் புனித நீராட குவிந்து வருகின்றனர். 45 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில், சுமார் 63 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கின்றன.
மகா கும்பமேளா:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மூன்று நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்தில் நீராடினால், புனிதமாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவானது நடைபெறுகிறது. இந்த திருநாளில் புனித நீராடினால், கூடுதல் சிறப்பாகும் என கருதப்படுகிறது. அதிலும், இந்த வருடம் கும்பமேளாவானது, மகா கும்பமேளா என கூறப்படுகிறது. அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் விழாவாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த வருடம் கூடுதலாக, உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் இடத்தில் மூன்று நதிகளும் , சங்கமிப்பதாக கூறப்படுகிறது. கங்கை நதி மற்றும் யமுனை ஆகிய இரண்டு நதிகளும் மேற்பரப்பிலும், சரஸ்வதி நதி பூமிக்கடியிலும் ஒரே இடத்தில் சங்கமிப்பதாக கூறப்படுகிறது.
கடைசி நாளில் குவிந்த மக்கள்:
இந்நிலையில், இந்த வருட கும்பமேளாவானது கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி , இன்றுடன் நிறைவடைகிறது. இன்றுடன், கும்பமேளாவின் கடைசி நாள் என்பதால் , எப்படியாவது புனித நீராடிவிட வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள பக்தர்கள் மட்டுமன்றி, உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள், பிரயாக்ராஜ் விரைந்தனர்.
இந்த வருட கும்பமேளாவில், குடியரசுத் தலைவர் முர்மு , பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முதல் மக்கள் பலரும் புனித நீராடிய நிலையில், இதுவரை 63 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசல்- உயிரிழப்பு:
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையானது 140 கோடியை தாண்டியதாக கூறப்படும் நிலையில், 63 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடிய நிலையில், ஒரே இடத்தில் மக்கள் கூட்டமாக கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதும், உத்தர பிரதேச அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி, மவுனி அமாவாசை தினத்தின்போது, கும்பமேளாவின் மிகவும் பிரசித்தி பெற்ற தினம் என்பதால், கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
போக்குவரத்து சிக்கல்:
மேலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும், பிரயாக்ராஜ் நகரில் விரைந்ததால், போக்குவரத்தும் சற்று சிக்கலாகவே இருந்தது. விமான டிக்கெட் விலையும் 10 மடங்கு வரை உயர்ந்தது. ரயிலிலும் கூட்டமானது அதிகமானது. இதனால், கூட்ட நெரிசலில், சில இடங்களில் ரயிலில் அதிகமான பயணிகள் கூடியதால், முன்பதிவு செய்யாத பயணிகளும், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏற ஆரம்பித்தன. மேலும், சில ரயில் நிலையங்களிலும், ரயில் கண்ணாடிகளை உடைத்தும் ரயிலில் ஏறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீராடி மகிழ்ந்த கோடிக் கணக்கான மக்கள்:
மேலும், கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மக்கள் பலர் ஒன்று கூடியதால் நீரானது, மாசடைந்துள்ளது என்றும், திரிவேணி சங்கமத்தில் உள்ள நீரானது குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் தகுதியற்ற நீர் என தேசிய பசுமை தீர்ப்பாயமும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. ஆனால், உ.பி முதல்வர் யோகி தலைமையிலான அரசு, நீர் குடிப்பதற்கு ஏற்றது என்ற தகவலையும் வெளியிட்டது.
இந்நிலையில், 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்ப மேளாவில் , கோடி கணக்கான மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இன்று கடைசி நாள் என்பதால் ஒரு கோடி கணக்கான மக்கள் பங்கேற்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

