குழந்தை திருமண தடை சட்டம்.. இஸ்லாமியர்களுக்கு பொருந்தாதா? கேரள உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!
எந்த மதத்தவராக இருந்தாலும், குழந்தை திருமணத் தடைச் சட்டம் பொருந்தும் என கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தைத் திருமணத்தால் உளவியல் ரீதியாக பிரச்னைகள் ஏற்படலாம் என நீதிபதி கருத்து.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006 பொருந்தும் என கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்த மதத்தவராக இருந்தாலும், அவர் முதலில் இந்தியன் என்றும் பிறகுதான், அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக கருதப்படுகிறார் என நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன், தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: பாலக்காட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு, குழந்தை திருமணத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில் நீதிபதி இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி என எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குழந்தை திருமண தடை சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பெண்ணின் (வழக்கு தொடரும்போது மைனர்) தந்தை உள்பட நீதிமன்றத்தில் பல மனு தாக்கல் செய்தனர். அதில், "முஸ்லிமாக இருப்பதால், பருவமடைந்த பிறகு, அதாவது 15 வயதில் திருமணம் செய்து கொள்ள மதத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது" என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "ஒருவர் முதலில் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். அதன் பிறகுதான் அவருடைய மதம் வருகிறது. மதம் இரண்டாம் பட்சம்தான். குடியுரிமைதான் முதலில் வரவேண்டும். எனவே, மத வேறுபாடின்றி, ஒருவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி என யாராக இருந்தாலும், குழந்தை திருமண தடை சட்டம் 2006 அனைவருக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.
அதிரடி கருத்துகளை தெரிவித்த நீதிபதி: குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றை குழந்தை திருமணங்கள் மறுக்கின்றன. சுரண்டலிலிருந்து பாதுகாக்க தவறுகிறது. குழந்தை திருமணங்கள் மற்றும் கர்ப்பம் ஆகியவை குழந்தை இறப்புக்கும் தாய் இறப்புக்கும் பாலியல் தொற்று போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தை திருமணம் பெரும்பாலும் பெண்களை பள்ளி கல்வியை கைவிட செய்கிறது. அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மட்டுப்படுத்துகிறது. குழந்தை மணப்பெண்கள் குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
குழந்தை திருமணம் வறுமையை நிலைநிறுத்தலாம். தனிநபர்கள் மற்றும் சமூகத்திற்கு பொருளாதார வாய்ப்புகளை குறைக்கலாம். குழந்தைத் திருமணத்தால் குழந்தைகளுக்கு மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படலாம்.
சமூக தனிமைப்படுத்தலுக்கும், குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்தும் துண்டிக்கப்படுவதற்கும் குழந்தை திருமணம் வழிவகுக்கும். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மரபுகளை குழந்தை திருமணம் மீறுகிறது" என தெரிவித்துள்ளது.