விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐ சதி; உளவுத் துறை எச்சரிக்கை!
வேளாண் சட்டங்களைப் போல், தொழிலாளர்களுடைய உரிமைகளை முற்றாக பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், அரசு நிறைவேற்றி இருக்கிறது.இதனால், விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். அதேபோல் மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களிலும் போராட்டங்களை நடத்தவிருக்கின்றனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை டெல்லி காவல்துறையையும் மத்திய அரசையும் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வாட்டும் குளிரையும், வதைக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாது விவசாயிகள் போராடி வருகின்றனர். களத்திலேயே பலர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்தும் மூடல்!
இந்நிலையில், இன்று (ஜூன் 26ஆம் தேதி) புகழ்பெற்ற விவசாயிகள் தலைவர் தயானந்த சரஸ்வதி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மாபெரும் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், மாநிலத் தலைநகர்களில் ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால், டெல்லியில் போராட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை டெல்லி காவல்துறையையும் மத்திய அரசையும் எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. போராட்டக் களங்களில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மூடப்படுகிறது. சட்டப்பேரவை வளாகமும் இந்த நேரத்தில் மூடப்படுகிறது.
வேளாண் அமைச்சர் கோரிக்கை:
இன்றைய போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு விவசாய சங்கங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மத்திய வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். "போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு அனைத்து விவசாய சங்கங்களுக்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை அரசு நடத்திவிட்டது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒளிமயமாக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், சம்யுக்த் கிஸான் மோர்சா அமைப்போ, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோரி அவருக்கு மனு அளிக்கவுள்ளோம் என்று கூறியிருக்கிறது. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைக்கவுள்ளனர். மேலும், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராடத்தைக் கைவிடுவதில்லை என்பதில் விவசாய அமைப்புகள் உறுதியோடு இருக்கின்றன.
வேளாண் சட்டங்களைப் போல், தொழிலாளர்களுடைய உரிமைகளை முற்றாக பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதனால், விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். அதேபோல் மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களிலும் போராட்டங்களை நடத்தவிருக்கின்றனர்.