Himachal Election 2022: இந்தியாவின் முதல் வாக்காளரை கவுரவித்த கூகுள்...! வைரலாகும் வீடியோ இதோ...
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகிக்கு கூகுள் இந்தியா வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
கவுரவித்த கூகுள் :
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு 34வது முறையாக வாக்களித்த கின்னூரைச் சேர்ந்த சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகிக்கு கூகுள் இந்தியா வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது. நவம்பர் 5ம் தேதி அவர் உயிரிழக்கும் முன் நவம்பர் 2ம் தேதி கல்பாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தபால் வாக்கு மூலம் வாக்களித்தார்.
இதுதான் அவர் அளித்த முதல் தபால் வாக்கு ஆகும். ஆனால், அது நாள் வரை எத்தனை சவால்கள் இருந்தாலும் தனது ஜனநயாகக் கடமையை ஆற்ற அவர் தவறியதே இல்லை. தனது 106- ஆவது வயதில் மரணமடைந்தார். இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்.
முதல் வாக்காளர் :
``இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்காக ஷியாம் சரண் நேகி, தபால் மூலம் தனது இறுதி வாக்கைப் பதிவு செய்தார். அவருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்'' என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கூகுள் இந்தியா டுவிட்டரில் சுமார் 2 நிமிடத்துக்கு மேல் ஓடும் வீடியோவை பகிர்ந்துள்ளது. ஜனநயாகக் கடமையை ஆற்றிய முதல் இந்தியர் ஷியாம் சரண் நேகியை நினைவு கொள்வதில் பெருமை அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
வீடியோ
கிண்ணூரில் தேர்தல் சமயங்களில் காலநிலை எப்படி இருக்கும் என்று குழந்தைகளுக்கு அவர் சொல்வது போல் வீடியோ தொடங்குகிறது. அவர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழையோ, பனியோ எனது ஜனநாயகக் கடமையை எந்தத் தடங்கல் வந்தாலும் நிறைவேற்றிவிடுவேன். அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அவர் கூறுவது போல் வீடியோ முடிகிறது.
Remembering Mr. Shyam Saran Negi, the first Indian Voter, who taught us that nothing can stand in the way of our biggest duty as a citizen 🇮🇳👆 pic.twitter.com/GqgWXcIipO
— Google India (@GoogleIndia) November 12, 2022
நேகி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் முறையாக ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது வாக்களித்தார். அதன் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார். முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருந்தன, ஆனால், கின்னூரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட்டது.
ஷியாம் சரண் நேகி அந்த காலகட்டத்தில் கிண்ணூரில் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவருக்கு அன்று தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. அவர் அதிகாலையில் வாக்குச் சாவடிக்கு வந்தடைந்தார். தேர்தல் பணிக் குழுவினரோ காலை 6:15 மணிக்கு வந்தனர். நேகி தனது பணிக்கு செல்ல வேண்டும் என்று கோரி விரைவாக வாக்களிக்க அனுமதி கேட்டார். இதன்காரணமாகவே அவர் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Voter ID Camp : இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்..! பணிக்கு செல்வோர்களுக்காக...
முன்னதாக, சிம்லா முதல் ஸ்பிட்டி வரை உள்ள 55 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தின் இன்று சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இமாச்சல பிரதேச மக்கள் புதிய மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலைகள், காடுகள் நிறைந்த மாநிலமான இதில் தேர்தல் நடத்துவது எப்போதுமே ஒரு கடினமான வேலைதான். இதில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மூன்று தற்காலிக வாக்குச் சாவடிகள் உட்பட 7,884 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தேர்தல் :
மாநிலம் முழுவதும் உள்ள 68 தொகுதிகளில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் உள்பட மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக-விற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மேலும் மாநிலத்தின் வாக்காளர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோளுடன் தனது பிரச்சாரத்தை முடித்தார்.
பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தனது பலத்தை அதிகரிக்கும் என்று வேட்பாளர்களுக்கு செய்தி கூறி சென்றார். பல ஆண்டுகளாக தேர்தல்களில் தோல்வியை பெற்று வரும் காங்கிரஸ் இந்த தேர்தலில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது