பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய பாடங்கள் இரு பகுதிகளாக, 8 முதல் 10 பக்கங்களுக்கு இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிக தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான பாடங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களாக உள்ளன.
நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு சுற்றுலாப் பயணிகள் ஓய்வாக விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. மே 6ஆம் தேதி இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு, தீவிரவாதி முகாம்களை குறி வைத்தனர். இதில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலின்போது, ஆண்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டனர். இதனால் பெண்களின் புனிதமாக பார்க்கப்படும், குங்குமம் அழிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே பெண்கள் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தின் பெயராக சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்த பாடம், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பாடம்
இரு பகுதிகளாக இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக, 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பகுதியாகவும் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்னொரு பகுதியாகவும் இந்தப் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன. 8 முதல் 10 பக்கங்களுக்கு இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

என்ன காரணம்?
இந்தியாவின் ராணுவ பலத்தையும் பாகிஸ்தானின் தோல்வியையும் மாணவர்களிடையே பறைசாற்றும் விதமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளதாக என்சிஇஆர்டி தெரிவித்து உள்ளது.
அண்மைக் காலங்களில் கொரோனா வைரஸ், அதன் தாக்கம், இந்தியாவின் டிஜிட்டல் பலன், சந்திராயன் 3 மிஷன் உள்ளிட்ட சம காலத்திய நிகழ்வுகள் பாடங்களாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






















