Watch video: எங்கு பார்த்தாலும் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட கார்..இமாச்சல பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை..!
கனமழை பெய்யும் போது சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை அந்த மாநிலத்தை புரட்டி போட்டுள்ளது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை, மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்லா மாவட்டம் கோட்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் கனமழை:
குலு நகரில் நிலச்சரிவின் காரணமாக வீடு சேதமடைந்ததில் ஒரு பெண் மரணம் அடைந்தார். அதேபோல, நேற்று இரவு, சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குலு - மனாலி சாலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கற்கள் விழுந்துள்ளதால், குலு மணாலியில் இருந்து அடல் சுரங்கப்பாதை மற்றும் ரோஹ்தாங் நோக்கி செல்லும் வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 36 மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் பதின்மூன்று நிலச்சரிவுகள், ஒன்பது திடீர் வெள்ளம் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், 736 சாலைகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன. தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் கங்கை நதியில் ஒரு வாகனம் நிலச்சரிவில் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்:
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த காரில் டிரைவர் உட்பட 11 பேர் பயணித்தனர். அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கேதார்நாத்தில் இருந்து ரிஷிகேஷ் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராவி, பியாஸ், சட்லஜ், செனாப் உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர் நிரம்பி வழிவதால், கனமழை பெய்யும் போது சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.
பியாஸ் நதி நிரம்பி வழிவதால் லே-மனாலி தேசிய நெடுஞ்சாலையின் (NH3) ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. குலு அருகே பியாஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் வீடுகளில் சிக்கியிருந்த 5 பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) இன்று மீட்டனர்.
சிம்லா, சிர்மூர், லாஹவுல் மற்றும் ஸ்பிதி, சம்பா மற்றும் சோலன் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தின் காரணமாக பல சாலைகள் முடங்கின. பல இடங்களில் மரங்கள் விழுந்து ரயில் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் யுனெஸ்கோ பாரம்பரியமிக்க சிம்லா மற்றும் கல்கா பாதைக்கு இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
#WATCH | Himachal Pradesh: Several cars washed away in floods caused by heavy rainfall in the Kasol area of Kullu
— ANI (@ANI) July 9, 2023
(Source: Video shot by locals, confirmed by Police) pic.twitter.com/61WsXg08QN
சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நேற்றும் இன்றும் 'ரெட்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் நேற்றும் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.