இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
தமிழ்நாட்டின் வேளாண்-உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த, ஐஐடி சென்னை தமிழக அரசுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சந்தை அணுகுமுறை, ஏற்றுமதித் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்காக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன் இக்கல்வி நிறுவனம் உத்திசார் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது.
கிராமப்புற மேம்பாடு, வேளாண் வணிக கண்டுபிடிப்பு
ஐஐடி சென்னை, தமிழ்நாட்டின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டுமுயற்சியின் மூலம் தமிழ்நாட்டில் நிலையான கிராமப்புற மேம்பாடு, வேளாண் வணிக கண்டுபிடிப்பு, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உயர் அமைப்பாக செயல்படும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன் (Tamil Nadu Agri Business and Food Processing Export Corporation - TNAPEx) ஐஐடி சென்னை, அண்மையில் உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தலைமைச் செயலகத்தில் ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த் ஐஏஎஸ் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐஐடி மெட்ராஸ் மூலம் கிடைக்கப்பெற்ற நிபுணத்துவத்தை வரவேற்று தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், ஐஏஎஸ் கூறுகையில், கிராமப்புற விநியோகச் சங்கிலிகளை மாற்றுவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், புதுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த கூட்டுமுயற்சியின் நன்மைகளை குறிப்பிட்ட ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, அன்றாட சவால்களைத் தீர்ப்பதில் ஐஐடியின் பன்முக வலிமையை சுட்டிக்காட்டினார்.
ஆராய்ச்சி, பயிற்சி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தும் திறன்கள் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வேளாண் வணிக சுற்றுச்சூழல் அமைப்பில் செயல்பாட்டுத் திறன், சந்தைப்படுத்துதல், நிலைத்தன்மையை மேம்படுத்தும் ஐஐடி சென்னையின் திட்டத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்வரும் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது:
- வேளாண் வணிகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் அளித்தல்
- விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் உணவு வீணாவதைக் குறைத்தல்
- சந்தை அணுகல் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துதல்
- பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் தயாரிப்பு சந்தைப்படுத்தலை மேம்படுத்துதல்
- அதிக தாக்கத்திற்கான அரசாங்க திட்டங்களை மதிப்பீடு செய்தல்
இவ்வாறு ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.






















