Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமித்து சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

Chief Election Commissioner: தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான புதிய விதிகளின் கீழ், நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு நேற்று மாலை கூடி, அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயரை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே ஞானேஷ் குமாரின் நியமனம் வந்துள்ளது. இவர் ஜனவரி 26, 2029 வரை அவர் தலைமை தேர்தல் ஆணையராகத் தொடர்வார். அதாவது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பதவியில் நீடிப்பார். நாட்டின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும், ராஜிவ் குமார் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், நாளை 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்க உள்ளார்.
சட்ட அமைச்சகம் அறிவிப்பு:
இதுதொடர்பான அறிக்கையில், “"தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (சட்டம் எண். 49/2023) இன் பிரிவு 4-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிப்ரவரி 19, 2025 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்" என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யார் இந்த ஞானேஷ்குமார்?
ஞானேஷ் குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். 1988 ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான குமார், கேரள அரசின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள், பொதுப்பணித் துறை, அரசுத் திட்டத்தை நவீனமயமாக்குதல் மற்றும் உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் போன்ற பல்வேறு துறைகளைக் கையாண்டுள்ளார்.
கான்பூரில் உள்ள ஐஎல்டி-யில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தார். இந்தியாவில் ஐசிஎஃப்ஏஎல்-ல் வணிக நிதி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எச்எல்டி-யில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றார்.
முதல் தேர்தல்:
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலை தான் முதல் பணியாக மேற்கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற சட்டமன்றத் தேர்தல்களை தலைமையேற்று நடத்த உள்ளார். இதற்கிடையில், 1989 கேடரைச் சேர்ந்த டாக்டர் விவேக் ஜோஷி, ஐஏஎஸ், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக்குழு:
தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான புதிய விதிகள் தொடர்பான, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்த முடிவை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட போதிலும், இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரின் பெயரை இறுதி செய்யும் பணி பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வுக் குழுவில் பிரதமர் உடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

