இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி. ராஜா மீண்டும் தேர்வு... சவால்களை சமாளிப்பாரா?
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 24ஆவது காங்கிரஸில் (கட்சியின் உச்சபட்ச அமைப்பு) புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா நேற்று ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 24ஆவது காங்கிரஸில் (கட்சியின் உச்சபட்ச அமைப்பு) புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஜூலையில் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியபோது, டி. ராஜா பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 73 வயதான ராஜா ஒரு பிரதான கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை பதவியை வகிக்கும் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
Revolutionary greetings on your re-election as general secretary of the CPI, Comrade D Raja! Look forward to our struggles together and discharging the Left’s responsibilities at this crucial time for India ✊🏾 pic.twitter.com/cZPI8DhQgz
— Sitaram Yechury (@SitaramYechury) October 18, 2022
பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து பேசிய டி. ராஜா, "கட்சிக்கு புத்துயிர் அளிப்பது, பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது என்ற இரட்டை இலக்கை கொண்டு முன்னேறுவேன்.
பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் முதன்மை நோக்கம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை. இந்த பொதுவான இலக்கிற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும்" என்றார்.
பாஜக ஆட்சியை விமர்சித்துள்ள அவர், "அரசியல் சாசன நிலைகளை மறுவரையறை செய்து, மதச்சார்பற்ற மற்றும் பொதுநல அரசை தகர்க்க முற்படும் பேரழிவை பிளவுபடுத்தும் அரசாங்கத்தை மோடி வழிநடத்தியுள்ளார்" என்றார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவிவருவது குறித்து பேசியுள்ள அவர், "கூட்டாட்சி அமைப்பை அழிக்க பாஜக களமிறங்கியுள்ளது. ஆளுநர் பதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அவமதிக்கப்படுகின்றன.
இது ஒரு பேரழிவுகரமான போக்கு, அதை எதிர்க்காவிட்டால், நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தன்மையையே மாற்றிவிடும். அக்கட்சியின் தேர்தல் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவு கவலையளிக்கிறது. கட்சியின் தேர்தல் செயல்திறன் நமது கருத்தியல் மற்றும் அரசியல் செல்வாக்குடன் பொருந்தவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.
2025இல், நாங்கள் எங்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம். அதற்கு முன் நம் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை கட்சியை பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், பல்வேறு வெகுஜன இயக்கங்களில் நமது ஈடுபாட்டையும், மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் உள்ள பங்கையும் நாம் மறந்துவிட முடியாது" என்றார்.
1925இல் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2025ல் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.