ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
Op Sindoor ISRO: இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய ஆப்ரேஷன் சிந்தூரில், செயற்கைகோள்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன.

Op Sindoor ISRO: ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவுடையது மட்டுமின்றி வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் நமது ராணுவம் பயன்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர்:
அதிக அளவிலான விண்வெளி சொத்துகளை பயன்படுத்தி, தீவிரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியை இந்தியா வசப்படுத்தியுள்ளது. செயற்கைகோள் மூலம் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் தரவுகள் ஆகிய விண்வெளி தொழில்நுட்ப தகவல்களை பயன்படுத்தி தான், பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா டூ சர்வதேச சாட்டிலைட்கள்:
இஸ்ரோ அதிகாரி கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், “தந்திரோபயங்களுக்கான நமது அனைத்து சொத்துகளும் பல்வேறு வழிகளில் நமது ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பயன்படுத்தப்பட்டன. நேரம் பார்க்காமல் உழைத்த நமது வீரர்களுக்காக, நாட்டின் மிக முக்கிய நடவடிக்கைகளில் இஸ்ரோ பங்களித்தது பெரும் கவுரவமாக உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு அதிகாரி பேசுகையில், “ராணுவம் நேரடியாகக் கிடைக்கும் இந்திய செயற்கைகோள்களின் தகவல்களை அணுகும் அதே வேளையில், விண்வெளி நிறுவனம் மாக்சர் போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து "மீண்டும் மீண்டும் மீண்டும்" தரவுகளையும் வழங்கியது” என தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் ராணுவத்திற்கு மட்டும் 9 முதல் 11 செயற்கைக்கோள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எந்த சாட்டிலைட்கள் பயன்படுத்தப்பட்டன?
இந்தியாவின் காட்ரோசாட் செயற்கைகோள்கள் தான் ஆப்ரேஷன் சிந்தூருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. உயர் தரத்திலான புகைப்படங்கள் மற்றும் புகைப்படம் & வீடியோக்களை வழங்கும் திறன் கொண்டவையாகும். இந்த செய்ற்கைகோள்கள் நீண்ட காலமாகவே ராணுவத்திற்கான தொழில்நுட்ப உபகரணமாக செயல்பட்டு வருகிறது. எதிர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உதவும் ரேடார் புகைப்படங்களை வழங்கக் கூடிய Risat செயற்கைகோள்களும், தொலைதொடர்பு நோக்கத்திற்காக ஜிசாட் செயற்கைகோள்கள்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்திற்காக ஜிபிஎஸ் உடன் இந்தியாவின் நாவிக் தொழில்நுட்ப செயற்கைகோளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் ராணுவத்திற்கான கார்டோசார் ஏவுகணைகளை இஸ்ரோ ஏவி வருகிறது. முன்னதாக 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின்போது கூட இந்த செயற்கைகோள்கள் பயன்படுத்தப்பட்டன.
வெளிநாட்டு உதவி:
அமெரிக்காவைச் சேர்ந்த மக்சர் நிறுவனம் உலகம் முழுவதும் அரசு மற்றும் அரசு சாராதா அமைப்புகளுக்கு, செயற்கைகோள் வாயிலான தரவுகளை வழங்கி வருகிறது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை, தாக்குதலுக்கான திட்டமிடலுக்கு இந்தியா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிறுவனத்தின் உதவியை அண்மையில் பாகிஸ்தான் அணுகியதா என்பது தெரியவில்லை. அதேநேரம், சீனாவின் விரிவான ராணுவ விண்வெளி தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பணியில் செயற்கைகோள்:
இதனிடையே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைகோள்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், “நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், நமது செயற்கைக்கோள்கள் மூலம் சேவை செய்ய வேண்டி உள்ளது. நமது 7,000 கி.மீ நீளமுள்ள கடற்கரையை நாம் கண்காணிக்க வேண்டும். முழு வடக்குப் பகுதியையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல், நாம் அதை அடைய முடியாது” என இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.





















