CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025 Declared: இந்தத் தேர்வை 19,299 பள்ளிகளில் 7330 தேர்வு மையங்களில் எழுதினர். 16 லட்சத்து 92,794 பேர் தேர்வை எழுதிய நிலையில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. இதில், 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை இணையத்தில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேர்ச்சி விகிதம் எப்படி?
2024- 25ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 19,299 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 7330 தேர்வு மையங்களில் எழுதினர். 16 லட்சத்து 92,794 பேர் தேர்வை எழுதிய நிலையில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.
மாணவிகளைப் பொறுத்தவரையில், 91.64 சதவீதம் பேரும் மாணவர்கள் 85.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் வழக்கம்போல மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் 5.94 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
முதலிடம் பிடித்த விஜயவாடா
அதேபோல விஜயவாடா பிராந்தியம் 99.6 சதவீத தேர்ச்சியோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்னை 97.39 சதவீதத் தேர்ச்சியோடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் பிரயாக் ராஜ் பிராந்தியம், 79.53 தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.
பள்ளிகளைப் பொறுத்தவரை, ஜவஹர் நவோதயா பள்ளிகள் 99.29 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 99.05 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இணையத்தில் காண்பது எப்படி?
- CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ போர்ட்டலான results.cbse.nic.in-க்குச் செல்லவும்
- "CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025" என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் தாயின் பெயரை உள்ளிடவும்.
- உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- மாணவர்கள் தங்களின் முடிவுகளைப் பதிவிறக்கி சேமித்து, வைத்துக் கொள்ளலாம்.
மேலும் டிஜி லாக்கர் செயலி, குறுஞ்செய்தி ஆகியவை மூலமும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.






















