Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேரும் பெண்களை எப்படி ஏமாற்றினார்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 9 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தும், வீடியோ எடுத்து மிரட்டியும் ஏராளமான இளம்பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு:
2019ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை இந்த கும்பல் எப்படி அரங்கேற்றியது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார். இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். வசதியான குடும்ப பின்னணியைச் சேர்ந்த இவர்கள் வாட்ஸ் அப்பில் பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ் என்ற வாட்ஸ் அப் குழுவை வைத்திருந்தனர்.
பைக், கார் என்று ஆடம்பரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்த இவர்களில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசனும், சபரிராஜனுமே ஆவார்கள். இவர்களுக்கு கல்லூரி செல்லும் இளம்பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பெண்கள் ஆகியோரிடம் நண்பர்கள் போல பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
பண்ணை வீட்டில் அநியாயம்:
பின்னர், அவர்களிடம் காதலிப்பதாக கூறியும் அவர்களை நம்ப வைத்துள்ளனர். பின்னர், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களை தனியாக சந்திக்க வேண்டும், பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று அழைத்துச் செல்கின்றனர்.
இவர்கள் குறிவைக்கும் பெண்களை முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கோவை மாவட்டம் ஆணைமலையில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு திருநாவுக்கரசனோ, சபரிராஜனோ ஒரு பெண்ணை அழைத்துச் சென்று அவரிடம் தனியாக இருப்பதை நண்பர்கள் மூலமாக மறைமுகமாக வீடியோவாக எடுத்துள்ளனர்.
நண்பர்களுக்கு இரை:
பின்னர், அதே வீடியோவை காட்டி அந்த பெண்களை மிரட்டியுள்ளனர். வீடியோவை காட்டி மிரட்டிய பிறகே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவர்களின் சுயரூபம் தெரியவந்துள்ளது. பின்னர், வீடியோவை அழித்து விடுமாறும், தன்னை விட்டுவிடுமாறும் கெஞ்சும் பெண்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸின் காம கொடூர விளையாட்டிற்கு ஏராளமான பெண்கள் இரையாகியுள்ளனர். அவ்வாறு இவர்களிடம் சிக்கிய பெண்களை அடித்து சித்ரவதைப்படுத்துவதும், வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டுவதும் என தொடர் கதையாக வைத்துள்ளனர்.
கதிகலங்க வைக்கும் வீடியோ:
பெண்களை கொடுமைப்படுத்திய வீடியோக்களை திருநாவுக்கரசு தனது ஐபோன் செல்போனிலும், சபரிராஜன் தனது லேப்டாப்பிலும் வீடியோக்களாக வைத்திருந்தனர். இவர்கள் இருவரது செல்போன் மற்றும் லேப்டாப்களில் இருந்து மட்டும் 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, சித்ரவதை வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொடூரர்களிடம் சிக்கிய 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் விசாரணை நடத்த போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஏராளமான பெண்களை இவர்கள் இதுபோல பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை அறிந்தனர்.
9 பேரும் குற்றவாளிகள்:
பின்னர், இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் அரசால் வழங்கப்பட்டது. அவர்களின் தனியுரிமையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு அதிகளவு இருப்பதாக கருதியதால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த 9 பேர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெண்களை நம்ப வைத்து அவர்கள் வாழ்வை மோசம் செய்யும் இளைஞர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.





















