Gautam Gambhir: பக்கா ஸ்கெட்ச், தட்டி தூக்கியாச்சு - கேட்க ஆள் இல்லை, இந்திய அணியின் பவர்ஃபுல் கோச்சான கம்பீர்
Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை இல்லாத அளவிலான அதிகாரமிக்க பயிற்சியாளராக, கவுதம் கம்பீர் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனை காட்டிலும் அதிகாரமிக்கவராக, இனி பயிற்சியாளர் கம்பீர் செயல்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சபட்ச அதிகாரத்துடன் கம்பீர்:
இந்திய கிரிக்கெட் அணியின் மீது தனது அதிகாரத்தை செலுத்த முயன்ற கிரேக் சேப்பல் படுதோல்வி கண்டார். நட்சத்திர வீரர்களின் ஆதிக்கத்தை முன்னாள் கேப்டனாக இருந்து பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவால் கூட கையாளமுடியவில்லை. இந்திய அணியை பொறுத்தவரையில் நட்சத்திர வீரர்களின் ஆதிக்கத்திற்கு பின்னால் தான் பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு பிஷன் சிங் பேடி, சேப்பல் மற்றும் கும்ப்ளே என பல உதாரணங்கள் உண்டு. இதனை உணர்ந்து செயல்பட்டதால் தான், ஜான் ரைட், கேரி கிறிஸ்டன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் வெற்றிகரமான பயிற்சியாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், இந்திய அணியில் கேப்டனை காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய, அதிகாரமிக்க பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உருவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
கம்பீர் கைவசம் வந்த இந்திய அணி:
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோரின் ஓய்வை தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியில் வலுவான நட்சத்திர வீரர்கள் என யாரும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்திய அணியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தனது ஆலோசனையின்படி அதனை செயல்பட கம்பீருக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. கம்பீர் பயிற்சியாளராக வரும்போதே, அணியில் நட்சத்திர வீரர்களின் தாக்கம் என்பதை அழிக்க வேண்டும் என இலக்கு வைத்து இருந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படியே, ”கம்பீரின் எரா” என்ற புதிய பயணத்தை புதுமுகங்களை கொண்டு, வரும் WTC தொடரில் இருந்து தொடங்க உள்ளாராம். கம்பீரின் இந்த திட்டத்திற்கு அஜித் அகர்கரும் முழு ஆதரவு அளித்ததையே தற்போதைய சூழல்கள் வெளிப்படுத்துகின்றன.
கேப்டன்களின் ஆதிக்கம் ஓவர்:
இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் தான் முக்கிய முடிவை எடுப்பவராக திகழ்கிறார். பயிற்சியாளருக்கும் நிகரான அதிகாரங்கள் இருந்தாலும், கேப்டனின் முடிவுகளே தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. சவுரவ் கங்குலி, தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக இருந்தபோது, அவர்களது முடிவே இறுதியானதாக இருந்தது. ஆனால், அந்த கலாச்சாரம் கம்பீரின் பயிற்சி காலத்தில் இனி இருக்கப்போவதில்லை. அவரது முடிவுகளே உறுதியானதாகவும், இறுதியானதாகவும் இனி திகழப்போகிறது. ரோகித் மற்றும் கோலி அணியில் இருந்தபோதே, அவர்கள் கம்பீருடன் பெரிதும் இணக்கம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதிகாரம் இரண்டு பக்கமும் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்திய அணி இதுவரை கண்டிராத அதிகாரமிக்க ஒரு பயிற்சியாளராக கம்பீர் உருவெடுத்துள்ளார்.
பிசிசிஐ வளைந்தது எப்படி?
மாற்றத்திற்கான கட்டத்தில் உள்ள இந்திய அணி, உள்ளூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி மற்றும் பார்டர் கவாஸ்கர் கோப்பை இழப்பு போன்ற தோல்விகளை எதிர்காலத்தில் தவிர்க்க, தனக்கு போதுமான அதிகாரங்களை வழங்க பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, இளம் கேப்டனான நியமிக்கப்பட உள்ள சுப்மன் கில் குறைந்தபட்சம் தனக்கான வலுவான இடத்தை எட்டும் வரையிலாவது, அவர் கம்பீரின் பேச்சை கேட்டு நடந்துகொள்வார் என நம்பப்படுகிறது. கில் தற்போதே நட்சத்திர வீரராக அடையாளம் காணப்பட்டாலும், கம்பீரின் முடிவுகள் தொடர்பாக கேள்வி கேட்கும் அளவிற்கு அவர் இன்னும் வளரவில்லை என்பது மறுக்கமுடியாதது ஆகும். அந்த கேள்வி கேட்கும் அந்தஸ்தை கொண்டிருந்த பும்ராவின் கேப்டன்சி வாய்ப்பும், அவரது உடல்தகுதியை காரணம் காட்டி தட்டி பறிக்கப்பட்டுள்ளது.
ஒடிஐ மட்டும் தான் மிச்சம்:
டி20 போட்டிக்கான இந்திய அணியில் எப்படி தனிக்காட்டு ராஜாவாக கம்பீர் கோலோச்சி வந்தாரோ, அதேநிலையை தான் தற்போது டெஸ்டிலும் எட்டியுள்ளார். தற்போதைய சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. காரணம், 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, அந்த ஃபார்மெட்டில் மட்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.




















