Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case Judgement Tamil: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pollachi Case Judgement Tamil: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, 9 பேருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி வழக்கு - தண்டனை அறிவிப்பு:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பான வழக்கை கடந்த 6 ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதன் முடிவில், குற்றம்சாட்டப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி காலையில் தீர்ப்பளித்தார். அதன்முடிவாக, குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பகிர்ந்தளிக்கப்படும்.
எந்த குற்றவாளிக்கு எத்தனை ஆயுள்?
- ஏ1 - சபரிராஜன் - 4 ஆயுள் தண்டனை
- ஏ2 - திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை
- ஏ3 - சதிஷ் - 3 ஆயுள் தண்டனை
- ஏ4 - வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை
- ஏ5 - மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை
- ஏ7 - ஜேரன் பால் - 3 ஆயுள் தண்டனை
ஏ6, ஏ8 மற்றும் ஏ9 என குறிப்பிடப்பட்டுள்ள பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிகபட்ச தண்டனை விதிப்பு:
கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களின் புகாரிகளும், ஒரே வழக்காக விசாரணை செய்யப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளின் கீழ், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக சாகும் வரை ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம். அதில் அதிகபட்ச தண்டனையான சாகும் வரை சிறை என்ற தண்டனையை நீதிபதி அறிவித்துள்ளார். இதுபோக, குற்றவாளிகள் கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு ஒன்றரை லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ வெற்றிகரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், குற்றவாளிகள் 9 பேரும் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















