பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 100 நாட்களுக்கு மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 9 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்லும் ராஜபாதையில் அமைந்துள்ள விஜய் சௌக் சதுக்கத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்ப உள்ளனர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மட்டுமின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
டெல்லியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டர் விலை ரூபாய் 1000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். காங்கிரசார் தங்களது வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், பெட்ரோல் கேன் போன்றவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 107க்கும், டீசல் ரூபாய் 97க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவின் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும், உக்ரைன் – ரஷ்ய போராலும் அடுத்தடுத்து அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடியாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்