Muralidhar : சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்...! யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள முரளிதரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள முரளிதரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஜே) நீதிபதி எஸ் முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING| Supreme Court Collegium Recommends Transfer Of Orissa HC CJ Justice Muralidhar As Madras High Court Chief Justice https://t.co/UvUiuPjLcf
— Live Law (@LiveLawIndia) September 29, 2022
நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க புதன்கிழமை கூடியதாக வட்டாரங்கள் பிடிஐயிடம் தெரிவித்தன.
கூட்டத்தில், நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் தீர்மானித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.பஞ்சாப் மற்றும் ஹரியானா, பம்பாய் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிக்க செப்டம்பர் 12ம் தேதி தலைமை நீதிபதி லலித் தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நீதிபதி முரளிதர்..?
தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட நீதிபதி முரளிதர், 2006 ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 2002ம் ஆண்டும் மார்ச் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவி வகித்து வருகிறார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முரளிதர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தவர். டெல்லி உயர்நீதியாக இருந்தபோது பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். டெல்லி கலவர வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உத்தரவு பிறத்தவர்.
டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவினரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அமர்வுக்குப் பின்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி கடந்த 21ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி. ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த 22 ம் தேதி முதல் பொறுப்பேற்று கொண்டார்.