ரூ.50 கோடி.. 5 கிலோ தங்கம்.. அமைச்சர் வீட்டில் கொத்து கொத்தாக சிக்கிய பணம்...நாட்டை உலுக்கும் பண மோசடி வழக்கு
அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது குடியிருப்பில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடத்திய சோதனையில் சுமார் 29 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது குடியிருப்பில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடத்திய சோதனையில் சுமார் 29 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 18 மணி நேர சோதனையை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 10 டிரங்குகளுடன் அலுவலர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். முகர்ஜியின் இரண்டாவது குடியிருப்பில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பதை அறிய அமலாக்கத்துறை அலுவலர்கள் மூன்று நோட்டு எண்ணும் இயந்திரங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோர் ஜூலை 23 அன்று கைது செய்யப்பட்டனர். முன்னதாக, அவரது வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த வார சோதனையின் போது, புலனாய்வு முகமை அலுவலர்கள், முகர்ஜியின் மற்றொரு குடியிருப்பில் இருந்து 21 கோடி ரொக்கம், பெரிய அளவில் அந்நிய செலாவணி தொகை மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கைபற்றினர்.
வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்கள் அடங்கிய சுமார் 40 பக்க டைரியும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. முகர்ஜியின் இரண்டு வீடுகளில் இருந்து இதுவரை 50 கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய ஆவணங்களை அலுவலர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆசிரியர் நியமன மோசடி வழியாக நடைபெற்ற பணமோசடி தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பார்த்தா சாட்டர்ஜி பொறுப்பு வகித்து வருகிறார்.
அரசு நடத்தும் பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை சட்டவிரோதமாக நியமித்ததில் பார்த்தா சாட்டர்ஜிக்கும் அவரது நெருங்கிய உதவியாளருமான அர்பிதா முகர்ஜிக்கும் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது, இடமாற்றங்களுக்காகவும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற உதவுவதற்காகவும் பெறப்பட்ட பணம் தான் இப்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை அலுவலர்களிடம் முகர்ஜி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
"பார்த்தா என்னுடைய வீட்டையும் இன்னொரு பெண்ணின் வீட்டையும் மினி வங்கியாகப் பயன்படுத்தினார். அந்த இன்னொரு பெண்ணும் அவனுடைய நெருங்கிய தோழி" என முகர்ஜி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்