Crime : சொந்த வீட்டிலேயே 550 சவரன் திருட்டு! கள்ளக்காதலிக்கு கிஃப்ட்.. விசாரணையில் சிக்கிய தொழிலதிபர்!
சொந்த வீட்டிலேயே 550 சவரன் திருடி கள்ளக்காதலிக்கு கொடுத்த தொழிலதிபரை போலீசார்கைது செய்தனர்
550 சவரன்..
சென்னை பூந்தமல்லி முத்துநகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு சேகர் (40) மற்றும் ராஜேஷ் (37) மகன்கள் உள்ளனர். சேகர் பூந்தமல்லி அருகே பேக்கரி வைத்துள்ளார். அதோடு பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். ஏற்கெனவே திருமணமான நிலையில் சேகரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தற்போது மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்த சேகரின் மனைவி தன்னுடைய பீரோவில் இருந்த நகைகளை சோதனை செய்துள்ளார். அதில் பல நகைகள் மிஸ் ஆகியுள்ளது. சந்தேகமடைந்த சேகரின் மனைவி அனைத்து நகைகளையும் சோதனை செய்துள்ளார். அதில் தமிழ்ச்செல்வியின் நகை உட்பட மொத்தம் 550 சவரன் மாயமானது கண்டிபிடிக்கப்பட்டது.
வீட்டுக்குள் வைக்கப்பட்ட இத்தனை சவரன் நகை எப்படி காணாமல் போனது என ஷாக் ஆன சேகரின் மனைவி இது தொடர்பாக பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகாரளித்தார். வீட்டில் எந்த பொருளும் உடைக்கப்படாமல் திருட்டுபோவது சாத்தியமல்ல என்பதால் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர்தான் இந்த வேலையை செய்திருக்கவேண்டுமென்று சந்தேகித்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கள்ளக்காதல்..
பைனான்சியர் சேகருக்கு அவரது நண்பர் மூலம் வேளச்சேரியைச் சேர்ந்த ஸ்வாதி (22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். பியூட்டி பார்லரில் வேலைபார்ப்பதாக அறிமுகமான ஸ்வாதி சேகரிடம் நெருங்கிப்பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். தன்னுடைய வலையில் சேகர் விழுந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட ஸ்வாதி அவரிடம் அடிக்கடி நகை வேண்டும் எனக்கேட்டுள்ளார். சேகரும் வீட்டில் இருந்த நகையை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வாதிக்கு கொடுத்து வந்துள்ளார். பிறந்தநாள், புத்தாண்டு, தீபாவளி என முக்கிய தினங்களில் எல்லாம் நகையை கேட்டு வாங்கியுள்ளார் ஸ்வாதி. நகை மட்டுமின்றி பணம், கார் என முடிந்தவரை சேகரிடம் இருந்து சுருட்டியுள்ளார் சுவாதி. ஸ்வாதிக்காவே சேகர் ரூ30 லட்சத்துக்கு மேல் செலவழித்துள்ளார். சென்னையில் சுற்றியது மட்டுமின்றி வெளியூருக்கும் இருவரும் அடிக்கடி சென்றுவந்துள்ளனர்.
கைது..
தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் சேகர் மற்றும் ஸ்வாதியை கைது செய்தனர். ஸ்வாதியிடம் இருந்து கார் மற்றும் நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
திருமணமானவர்..
சேகர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது ஸ்வாதிக்கு தெரியும். ஆனால் ஸ்வாதிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த விஷயம் சேகருக்கு தெரியவே இல்லை. போலீஸ் விசாரணையில் இந்த உண்மை தெரியவர அங்கேயே ஷாக் ஆகியுள்ளார் சேகர். அதுபோல, இப்படியான விஷயத்தையெல்லாம் சேகர் செய்திருக்கமாட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியநிலையில் சேகரின் இந்த கள்ளக்காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கே ஷாக் கொடுத்துள்ளது. முன்னதாக, கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஸ்வாதி இந்த காதல் நாடகங்களை செய்து வந்ததாகவும் பலரையும் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி நகை, பணங்களை அவர் ஏமாற்றியதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்