IND vs BAN: அர்ஷ்தீப்சிங்கிற்கு கல்தா! பவுலிங்கில் மிரட்டும் இந்தியா! தத்தளிக்கும் நாகின் பாய்ஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீீப்சிங், பேட்ஸ்மேன் ரிஷப்பண்ட் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது.
தடுமாறும் வங்கதேசம்:
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக பந்துவீச்சை முகமது ஷமி தொடங்கினார். முதல் ஓவரிலே அனலாக பந்துவீசிய முகமது ஷமி அதே ஓவரில் செளமியா சர்க்காரை டக் அவுட்டாக்கினார். அதன்பிறகு வங்கதேச கேப்டன் ஷாண்டோ களமிறங்கினார். இந்திய அணிக்காக 2வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அவரது பந்தில் கேப்டன் ஷாண்டோ விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு எதிராக தற்போது வங்கதேசம் திணறி வருகிறது. அந்த அணிக்காக டன்ஷித் ஹாசன் - மெஹிதி ஹாசன் இருவரும் போராடி வருகின்றனர்.
பெஞ்சில் அர்ஷ்தீப்சிங், பண்ட்:
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது ப்ளேயிங் லெவனே ஆகும். பந்துவீச்சாளர்கள் யார்? மிடில் ஆர்டர் யார்? என்று இந்திய அணிக்கு பெரும் சவால் இருந்தது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியுடன் அர்ஷ்தீப்சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணா களமிறங்கியுள்ளார். ராணாவுடன் ஒப்பிடும்போது அர்ஷ்தீப்சிங்கிற்கு இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் அதிகம். மேலும், அவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். இந்திய அணி இன்றைய போட்டியில் இடது கை வேகப்பந்துவீச்சாளரே இல்லாமல் களமிறங்கியுள்ளது.
மேலும் ஏற்கனவே எதிர்பார்த்தது போல ரிஷப்பண்ட் உட்கார வைக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா, சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப்யாதவ் களமிறங்கியுள்ளனர். அக்ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக பும்ரா இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் மைதானத்தின் சீதோஷ்ண நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அர்ஷ்தீப்சிங், ரிஷப்பண்ட் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டதற்கு பல ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வங்கதேச அணியில் கேப்டன் ஷாண்டோ தலைமையில் தன்ஷித் ஹாசன், செளமியா சர்கார், தெளகித் ஹிர்தாய், முஷ்பிகிர் ரஹீம், மெஹிதிஹாசன், ஜாகர் அலி, ரஷீத், டன்ஷிம், டஸ்கின் அகமது, முஸ்தபிஷிகுர் ரஹ்மான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.




















