Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருடன், 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லியின் புதிய முதலமைச்சராக, பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுக்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி
தலைநகர் டெல்லிக்கு, பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 70 இடங்களில், 48 இடங்களை கைப்பற்றி, பாஜக ஆட்சியை பிடித்தது. இதன் மூலம், 27 ஆண்டுகளுக்குப்பின் அங்கு பாஜக ஆட்சி அமைக்கிறது. இதைத் தொடர்ந்து, முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
மோடி முன்னிலையில் முதல்வர், 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு
இதைத் தொடர்ந்து, டெல்லியின் 9-வது முதலமைச்சராகவும், 4-வது பெண் முதலமைச்சராகவும், பிரதமர் மோடி முன்னிலையில், பாஜகவில் முதல் முறை எம்.எல்.ஏ-வான ரேகா குப்தா பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவரும் அமைச்சருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவண் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் ரேகா குப்தாவுடன், அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, கபில் மிஸ்ரா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

