Onam Kasavu | ஓணம் செல்ஃபி போட ரெடியாகிட்டீங்களா? ஓணம் கசவு புடவையோட ஸ்பெஷாலிட்டி இதுதான்!
கேரளத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 23 வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக டிஜிட்டல் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படவுள்ளது.
கேரளத்துப் பெண்களை மட்டுமில்லை அனைவரையும் ஒருநாளாவது நாம் கட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையினைத் தூண்டுவது தான் ஒணம் பண்டிகையில் உடுத்தக்கூடிய வெண்மை நிற கசவு புடவைகள்.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாதான் ஓணம் பண்டிகை. சாதி, மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஒணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைப்பார்கள். இத்திருநாளில் மகாபலி மன்னனை வரவேற்கும்விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்படும். இதோடு மட்டுமின்றி கேரளத்து பெண்கள் இந்நாளுக்கு உரித்தான வெண்மை நிற சேலையினை உடுத்தி மேலும் சிறப்பிப்பார்கள். இந்த கேரளத்து கசவு சேலையினை அம்மாநில பெண்கள் மட்டுமின்றி தமிழகத்து பெண்களும் கட்டுவதற்கு மிகவும் ஆசைப்படுவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையானது இந்தாண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் வரை நடைபெறவுள்ளது. ஆனால் இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று என்பதால் டிஜிட்டல் முறையில் ஓணம் பண்டிகையினை கேரள மக்கள் கொண்டாடுவார்கள் என கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஷ் தெரிவித்துள்ளார். மேலும் கேரளத்தின் பராம்பரிய கலை, கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
என்னதான் டிஜிட்டல் முறையில் ஒணம் பண்டிகையினைக்கொண்டாடினாலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிச்சயம் மலர்க்கோலங்கள் இடம் பெற்றிருக்கும். அதிலும் செல்ஃபிக்கு பஞ்சமே இருக்காது என்றுதான் கூறவேண்டும். வெண்ணை நிற கேரளத்து கசவு சேலையினை அம்மாநில பெண்கள் மட்டுமில்லாது தமிழகப்பெண்களும் அணிந்திருக்க கூடும். எனவே இந்நேரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இந்த கசவு புடவையின் ஸ்பெஷல் என்ன? என்பது இதுவரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும். எனவே இங்கு நாம் சற்று தெரிந்துகொள்வோமா?
“கசவு“ என்பது கேரள புடவையின் பார்டரில் பயன்படுத்தப்படும் ஜரிகையை ( தங்க ஜரிகை) குறிக்கிறது. எனவே நெசவு மற்றும் அதன் உற்பத்தியில் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கின்ற ஜரிகையினைக்கொண்டு இதற்கு கசவு புடவை என்று பெயர் வந்தது. இந்த புடவையின் தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பெண்கள் 'செட்டு முண்டு' எனப்படும் இரண்டு துண்டு துணிகளை அணிவார்கள். இவை கேரளாவில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாராஜா பலராமவர்மா மற்றும் அவரது முதல்வர் உம்மிணி தம்பி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆவணங்கள் குறிப்பிடுகின்றனர். கேரளாவில் சிறந்த பருத்தி கைத்தறித் துணிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமபுரம் பகுதி ஒன்றாகும். தற்போதைய தமிழ்நாட்டின் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்த சாலிய சமூகத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் அங்கு திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தேவைக்காக ‘முந்தும் நெறியும்’ ஆடையினை தயாரித்தனர் என்று வரலாறுகள் கூறுகி்ன்றனர். இன்றைக்கும் அம்மாநிலத்தின் திருவிழாவினை அங்கு தயாரிக்கப்படும் சேலைகளைக்கொண்ட மக்கள் கொண்டாடுகின்றனர். குறிப்பாக இந்த கசவு புடவைகள் கேரளாவில் பலராமபுரம், சேந்தமங்கலம் மற்றும் குத்தம்புள்ளி ஆகியப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஒரு எளிய பார்டர் கொண்ட சாதாரண சேலையினை நெசவு செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை ஆகின்றது. ஒரு வேளை சேலையின் வாயிலாக ஏதாவது புதுவித டிசைன் மற்றும் டிசைன்கள் தேவைப்படும் பட்சத்தில் இந்த புடவையினை நெசவு செய்வதற்கு அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளும். மேலும் சேலை அல்லது கசவு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் தங்க ஜரிகை மற்றும் அதன் உற்பத்திக்கு எடுக்கப்படும் நேரத்தினைப்பொறுத்து சேலைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே தங்க ஜரிகையுடன் வெண்மைநிறம் கொண்ட இந்த கசவு புடவை இல்லாமல் கேரளத்தில் எந்தவித நிகழ்வும் முழுமையாக நிறைவுபெறாது என்றே கூறலாம்.