IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2வது போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி ஆர்சிபி-யுடன் மோத உள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின.
204 ரன்கள் டார்கெட்:
முதலில் ஆடிய மும்பை அணிக்கு பார்ஸ்டோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 204 ரன்களை பஞ்சாப்பிற்கு இலக்காக நிர்ணயித்தது. 204 ரன்களை எட்டினால் இறுதிப்போட்டி என்ற கனவுடன் பிரப்சிம்ரன் - பிரியன்ஷ் ஆர்யா ஜோடி களமிறங்கியது. பிரப்சிம்ரன் மும்பையின் போல்ட் பந்தில் பவுண்டரி அடித்து தொடங்கினாலும் அதன்பின்னர் தடுமாறினார். போல்ட் பந்தில் தடுமாறிய அவர் போல்ட் பந்திலே அவுட்டானார். அவர் 9 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இங்கிலிஷ் அபாரம்:
பின்னர், பிரியன்ஷ் ஆர்யா - ஜோஷ் இங்கிலிஷ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடினர். ஜோஷ் இங்கிலிஷ் பும்ரா வீசிய 5வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி 20 ரன்களை விளாசினார். ஆனால், அடுத்த ஓவரிலே அஸ்வனிகுமார் பந்தில் மறுமுனையில் அதிரடி காட்டிய பிரியன்ஷ் ஆர்யா அவுட்டானார். அவர் 10 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - இங்கிலிஷ் ஜோடி சேர்ந்தனர்.
இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆட வேண்டியது கட்டாயமாக அமைந்தது. பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 64 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலிஷ் பாண்ட்யா பவுன்சரில் அவுட்டானார்.
72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்:
அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்பிற்கு பார்ட்னர்ஷிப்பும், அதிரடியும் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் - நேகல் வதேரா ஜோடி சேர்ந்தார்.
பார்ட்னர்ஷிப் முக்கியம் என்பதால் இருவரும் நிதானமாகவே ஆடினர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி வந்த நிலையில் பாண்ட்யா ஓவரில் வதேரா கைக்கு அளித்த கேட்ச்சை ட்ரெண்ட் போல்ட் நழுவவிட்டார். பஞ்சாப் அணி 11வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. கடைசி 54 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 102 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இதனால், அதிரடிக்கு மாற வேண்டிய சூழல் அவர்களுக்கு உருவானது.
ஆட்டத்தை மாற்றிய ஸ்ரேயாஸ்:
கேப்டன் பாண்ட்யா சான்ட்னர், பும்ரா, டோப்ளே மற்றும் ஆகியோருடன் அவரும் பந்துவீசி நெருக்கடி அளிக்க வியூகம் வகுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் - வதேரோ ஜோடி 28 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. டோப்ளே வீசிய 13வது ஓவரில் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி 36 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 15வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி கடைசி 30 பந்துகளில் 57 ரன்கள் பஞ்சாப்பிற்கு தேவைப்பட்டது.
ஸ்ரேயாஸ் சிக்ஸர் மழை:
முக்கியமான கட்டத்தில் நேகல் வதேரா அவுட்டானார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். திடீர் திருப்பமாக ஷஷாங்க் சிங் 2 ரன்னில் ரன் அவுட்டானார். கடைசி 20 பந்துகளில் 35 ரன்கள் பஞ்சாபிற்கு தேவைப்பட்டது. ஸ்ரேயாஸ் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்ப கடைசி 2 ஓவரில் 12 பந்துகளில் 23 ரன்கள் பஞ்சாப்பிற்கு தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இறுதிப்போட்டியில் பஞ்சாப்:
அஸ்வனி வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை ஸ்ரேயாஸ் சிக்ஸருக்கு அனுப்பிய நிலையில், அடுத்த பந்தை அவர் நோ பாலாக வீச கிடைத்த ஃப்ரி ஹிட்டில் ஸ்ரேயாஸ் சிக்ஸர் விளாசி 10 பந்துகளுக்கு 10 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் விளாசி 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையை மாற்றினார் ஸ்ரேயாஸ் ஐயர். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸர் அடித்து பஞ்சாபின் வெற்றியை உறுதி செய்தார் ஸ்ரேயாஸ். ஸ்ரேயாஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 41 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புது சாம்பியன் கன்ஃபர்ம்:
இதன்மூலம் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இதன்மூலம் 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத புது அணி சாம்பியன் பட்டம் வெல்ல உள்ளது.




















