Ukraine Strikes Again: ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ
உக்ரைனை ரஷ்யா சாதாரணமாக அடித்துவிடும் என அனைவரும் எண்ணியிருந்த நிலையில், உக்ரைன் ரஷ்யாவை கதறவிட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஒரு பாலத்தை தகர்த்துள்ளது.

ரஷ்யா மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது உக்ரைன். ஏற்கனவே ரகசியமான ட்ரோன் தாக்குதலை நடத்தி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த உக்ரைன், தற்போது ரஷ்யாவில் இருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடி மருந்துகள் மூலம் தகர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
உக்ரைனால் ஏற்கனவே நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 41 போர் விமானங்களை சேதப்படுத்தியது உக்ரைன்.
ரஷ்யாவின் 5 ராணுவ விமான தளங்கள் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளன. இதில், உக்ரைன் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவ மாஸ்கோ பயன்படுத்திய Tu-95 மற்றும் Tu-22 போன்ற குண்டுவீச்சு விமானங்கள், A-50 ராடார் மற்றும் கட்டளை விமானம் ஆகியவை தாக்கப்பட்டவற்றில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது.
ஆபரேஷன் ‘Spider's Web‘
உக்ரைனிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஆபரேஷன் ‘Spider's Web‘ என்ற பெயரில், உக்ரைனால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்காக ஒன்றரை வருடங்கள் திட்டமிடப்பட்டதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த பிரமாண்ட தாக்குதலுக்காக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை திட்டமிடப்பட்ட நிலைகளில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கக்கூடிய ரஷ்யாவின் விமானங்களில் 34 சதவீத விமானங்களை அழித்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரேன்கள், மரத்தாலான மேற்கூரைகளைக் கொண்ட ட்ரக்குகளில் வைக்கப்பட்டு, முன்கூட்டியே ரஷ்யாவிற்குள் ரகசியமாக, ரஷ்ய விமானப்படைத் தளங்களுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது, ரிமோட் மூலம் மர மேற்கூரைகள் திறக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி பாலத்தை சிதைத்த உக்ரைன்
இந்த நிலையில், நேற்று மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது உக்ரைன். ரஷ்யாவில் இருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடி மருந்துகள் மூலம் தகர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தண்ணீருக்கு அடியில் செல்லும் ரோபோக்கள் மூலமாக 1100 கிலோ வெடிபொருட்கள் பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டதாகவும், பின்னர், அவை வெடிக்க வைக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காத நிலையில், ரஷ்ய ஊடகங்கள் மட்டும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
SBU blows up Crimean bridge! A bridge pillar was mined and remotely detonated! A fantastic operation! pic.twitter.com/yhY5wUesDY
— Oleksiy Goncharenko (@GoncharenkoUa) June 3, 2025
இந்த பாலம், ரஷ்யாவில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்ததால், ரஷ்ய படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பால சேதம், ரஷ்யாவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவதால், ரஷ்யா நிச்சயம் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போர் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், இரு நாடுகளும் தாக்குதலையும் தொடர்ந்து வருகின்றன. இதனால் மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.





















