Guna vs Thalapathy: காதல் காவியம் குணாவை வீழ்த்தி தளபதி வெற்றி பெற்றது ஏன்? - ஓர் அலசல்
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றி குணா படத்தை பற்றி மீண்டும் பேச வைத்துள்ள சமயத்தில், 1991ம் ஆண்டு குணாவை காட்டிலும் தளபதி படம் ஏன் வெற்றி பெற்றது?
![Guna vs Thalapathy: காதல் காவியம் குணாவை வீழ்த்தி தளபதி வெற்றி பெற்றது ஏன்? - ஓர் அலசல் Why Rajinikanth Starring Thalapathy Movie More Successful Than Kamal Haasan Guna in 1991 Manjummel Boys Tamil Cinema Guna vs Thalapathy: காதல் காவியம் குணாவை வீழ்த்தி தளபதி வெற்றி பெற்றது ஏன்? - ஓர் அலசல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/06/0e83283948770e71c8e670022653d26c1709738818903102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் கொண்டாடும் ஒரு படமாக மஞ்சுமெல் பாய்ஸ்(Manjummel Boys) மாறியுள்ளது. இந்த படத்தின் அடிப்படை கதை குணா படமும், அதில் வரும் குணா குகையும் ஆகும். தற்போது, அனைவரும் இதைப்பற்றி பேசினாலும் படம் வெளியானபோது குணா படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்று பலரும் ஆதங்கப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் வெற்றியே என்றும் கூறப்படுகிறது.
தளபதி வெற்றிக்கு காரணம் என்ன?
கமல்ஹாசனின் காதல் காவியங்களான புன்னகை மன்னன், ஏக் துஜே கேலியோ போன்ற படங்களின் வரிசையில் குணா படத்திற்கும் என்றும் தனி இடம் இருந்து கொண்டே இருக்கும். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது. 1991ம் ஆண்டு குணா படமும், தளபதி படமும் வெளியானபோது குணா படத்தை காட்டிலும் தளபதி படம் வெற்றி பெற்றதற்கு கீழே கூறும் அம்சங்களும் காரணமாக இருக்கலாம்.
குணா படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்திருந்த குணா என்ற கதாபாத்திரம் சோகம் கலந்த கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் சோகம் அன்புக்காக ஏங்கும் ஒரு கதாபாத்திரம். அந்த அன்பை காதலின் வடிவத்தில் இயக்குனர் கட்டமைத்திருப்பார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றிருந்த சூர்யா கதாபாத்திரமும் அவர் முன்னெப்போதும் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்தது.
சூர்யா கதாபாத்திரத்தின் சோகமும், தாக்கமும்:
அப்போதே சூப்பர்ஸ்டார் என்ற உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் ஏற்றிருந்த சூர்யா கதாபாத்திரம் தந்தை – தாய் யாரென்று தெரியாமல் ஆற்றில் அடித்து வரப்பட்ட குழந்தை, ஒரு பாட்டியின் ஆதரவால் சாதாரண குடிசைப்பகுதியில் வளரும் சிறுவன், தந்தை – தாய் யாரென்று தெரியாமல் பலராலும் சிறுவயது முதலே ஏளனமாக பார்க்கப்பட்ட இளைஞன், யாருடைய ஆதரவும் கிடைக்காததால் கல்வியும் கிடைக்காதவன், ஒரு இளைஞனுக்கு கிடைக்கும் காதலிலும் தோற்றவன், ஒரு கட்டத்தில் தன் தாய் யாரென்று தெரிந்தும் அந்த தாயிடம் சேர முடியாத மகன், தாய் யாரென்று தெரிந்தும் தந்தை யாரென்று தெரிந்து கொள்ள முடியாதவன், தன் காதலியை தன் சொந்த தம்பியே திருமணம் செய்து கொண்டதை காணும் ஒருவன், வாழ்வில் அத்தனை துயரங்கள் இருந்தும் தனக்கு கிடைத்த ஒரே ஆறுதலான உயிர் நண்பனான தேவாவின் மரணத்தை காண்பவன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்றிருந்த சூர்யாவின் கதாபாத்திரத்தின் சோகமானது குணாவின் சோகத்தை காட்டிலும் அதிகளவில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.
மேலும், இந்த சோகமான முரட்டுத்தனமான ஆக்ரோஷம் கலந்த சூர்யாவின் கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் ஏற்று நடித்தது ரசிகர்களை இன்னும் தங்கள் பக்கம் இழுத்தது. தனது ஸ்டைலாலும், பஞ்ச் டயலாக்காலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்காக சேர்த்த ரஜினிகாந்திற்கு தளபதி படத்தில் பஞ்ச் டயலாக்கோ, ஸ்டைல் காட்சிகளோ இடம்பெற்றிருக்காது. அவரது உடையுமே மிகவும் எளிமையானதாகவே இருக்கும்.
வழக்கத்திற்கு மாறான ரஜினிகாந்த் படம்:
வழக்கமான ரஜினிகாந்த் படமாக இல்லாமல் முற்றிலும் புதுமையான சோகமும், இழப்பும் கலந்த ஆக்ரோஷமான இளைஞனின் வாழ்க்கையையும், நட்பிற்காக அவன் எந்த எல்லைக்குச் செல்வதும் என தளபதி ரஜினிகாந்த் படமாக இல்லாமல் சூர்யா – தேவாவைச் சுற்றி நிகழும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததே தளபதி குணா படத்தை காட்டிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம்.
குணா எனும் காவியம்:
குணா படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்றுமே குணா படத்திற்கு தனி வரலாறே உண்டு. கமல் எனும் மகத்தான கலைஞன் குணாவாக அந்த படத்தில் வாழ்ந்திருப்பார். குணா படத்தில் இடம்பெறும் கண்ணே கலைமானே பாடலும், கமல்ஹாசன் பேசும் அபிராமி, அபிராமி வசனமும், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வசனமும் ஒவ்வொரு தமிழ் ரசிகர்களுக்கும் குணா வெளியாகி 32 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்படியே பசுமை மாறாமல் மனதில் நிற்கும். அந்த பாடலை கேட்கும்போதோ, அந்த வசனத்தை பேசும்போதோ கமல்ஹாசன் குணாவாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் வந்து நிற்பார். வர்த்தக ரீதியாக வெற்றி, தோல்வி என்று மாறியிருந்தாலும் குணாவும், தளபதியும் எப்போதும் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமான படைப்பாகவே நிற்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)