எம்ஜிஆர் - பிரபாகரன் சந்திப்பில் பேசிக்கொண்டது என்ன? உண்மையை உடைத்த வைகோ
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான சந்திப்பில் நடந்தது என்ன என்பது குறித்து வைகோ மனம் திறந்து பேசியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தியவர் பிரபாகரன். தமிழர்களுக்கான அவரது தனி நாடு கோரிக்கைக்கு தமிழ்நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் உறுதுணையாக இருந்தனர்.
இந்த நிலையில், பிரபாகரன் இதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக-வை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியதும், அவர் அளித்ததும் அனைவரும் அறிந்ததே ஆகும்.
எம்.ஜி.ஆர். - பிரபாகரன் சந்திப்பில் நடந்தது என்ன?
அந்த சந்திப்பின்போது என்ன நடந்தது? என்பதை பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ ஒரு முறை நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. கலைஞர்தான் என இருந்தோம். ஆனால், எந்த எம்.ஜி.ஆரை எங்களுக்கு பிடிக்கலயோ, அவருகிட்ட ஒரு உதவி கேட்கலாம் என பாலசிங்கம் சொன்னப்ப, அப்போ அவரு முதலமைச்சர்.
அவர் என்னங்க, அவரைப் போயி பாத்து என்னத்த தரப்போறாரு?ன்னு நாங்க ஒரு அலட்சியமா இருந்தோம். ஆனா, நாங்க தகவல் சொன்ன உடனே தோட்டத்துக்கு வரச்சொல்லிட்டாரு. துக்கையாண்டிதான் அப்போ ஸ்பெஷல் பிராஞ்ச்ல இருந்தாரு. நாங்க போன உடனே எங்களை உபசரிச்சு எங்களை சிற்றுண்டி அருந்த சொன்னாரு. அருமையான சிற்றுண்டி. நல்லா சாப்பிட சொன்னாரு.
2 கோடியை அள்ளி கொடுத்த எம்ஜிஆர்
எங்களுக்கு ரொம்ப வியப்பா இருந்தது. அதுக்கு பிறகு எப்படி கேட்குறதுனு தயங்கி, தயங்கி எங்களுக்கு நிதி வேணும், எங்க இயக்கத்துக்கு, கஷ்டமே அதுதான். நிதி இருந்தா எங்க இயக்கத்தை நாங்க வலுவா கொண்டு போவோம் என்றோம். எவ்வளவு வேணும் அப்படினு கேட்டாரு. நம்மதான் கேப்போமே இவரு 5 லட்சம், 10 லட்சம் கொடுப்பாரு. கேட்டு வைப்போமேனு 2 கோடி இருந்தா எங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்னு 2 கோடிதானே? என்றார்.
இப்போ ஒரு 50 லட்சம் கொடுத்துட்றேன். சாயங்காலத்துக்குள்ள மிச்ச 50 லட்சம். ரெண்டு நாள்ல முழுசு வந்துரும். எனக்கு மயக்கமே வந்துரும்போல இருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்ல. இதெல்லாம் தலைவர் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள்.
இவ்வாறு வைகோ விளக்கமாக கூறியிருந்தார்.
ஈழத்தமிழ் போராட்டத்திற்காக எம்ஜிஆர் மிகவும் உறுதுணையாக இருந்தார். எம்ஜிஆர் மட்டுமின்றி அப்போது அரசியல் களத்தில் இருந்த பலரும் ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

