கார்பரேட் கம்பேனிகளின் கடலைமிட்டாய்...போதும்பா உங்க ஃபேன் பாய் சம்பவம்
மக்களுக்கு மேஜிக்கை காட்டினால் அவர்களை திசைதிருப்பி வைத்திருக்கலாம். அவர்களின் சுதந்திரத்தை பறித்தாலும் ஆர்பரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்" - கிளாடியேட்டர் படத்தில் வரும் வசனம்

குட் பேட் அக்லி
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அப்படியான மெட்டிரியலை கொடுத்திருக்கிறார். படம் பற்றி மற்ற தரப்பு ரசிகர்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்தபடி கத்தி , கூச்சலிட்டு , கொண்டாடிய நிறைவோடு செல்கிறார். பல்வேறு கோடிகள் செலவிட்டு பல மனிதர்களின் உழைப்பை பெற்று உருவாகும் ஒரு படம் இரண்டரை மணி நேர கொண்டாட்டத்திற்காக வீணடிக்கப்படுவது , சினிமா எந்த அளவிற்கு நுகர்வு கலாச்சாரமாக மாறியிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ஃபேன்பாய் கலாச்சாரம்
இன்று மட்டுமா நடக்கிறது. அந்தந்த காலத்து நடிகர்களை மக்கள் இப்படிதான் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் ஸ்டார் இமேஜை வைத்து பணம் பார்ப்பதில் உச்சத்தில் இருக்கும் துறைகளில் ஒன்று தமிழ் சினிமா. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் ஒரு பெரிய தாக்கத்தை தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். எந்திரன் படத்திற்கு அடுத்திருந்தே ரசிகர்களுக்கு ஒரு பக்கா ரஜினி படம் கிடைக்கவில்லை. கொச்சடையான் , லிங்கா என அடுத்தடுத்து இரு படங்கள் தோல்வியை சந்திக்க பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார் ரஜினி. இரண்டு படங்களும் ரஜினியை ஒரு ஸ்டார் மற்றும் நடிகர் இரண்டாகவும் காட்டியது. அடுத்து வெளியான 2.0 அதன் திரைக்கதைக்காக வெற்றிபெற்றது என்று சொல்லமுடியாது. எந்திரன் படம் உருவாக்கிய எதிர்பார்ப்பு , ரஜினியை 3டியில் பார்ப்பது என சில காரணங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகின.
கிளாடியேட்டர் படத்தில் விளையாட்டின் மூலம் மக்களை திசைதிருப்ப பிரம்மாண்டமாக கொலாசியம் ஒன்றை உருவாக்குகிறது. அப்போது இடம்பெறும் வசனம் இது.
மக்களுக்கு மேஜிக்கை காட்டினால் அவர்களை திசைதிருப்பி வைத்திருக்கலாம். அவர்களின் சுதந்திரத்தை பறித்தாலும் ஆர்பரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ". வனிகமையப் படுத்தப்பட்டிருக்கும் சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு இது பொருந்தும்.
ரஜினி பெரிய ஹிட் கொடுக்க ரசிகர்கள் விரும்பி காத்திருந்த நிலையில்தான் பேட்ட திரைப்படம் வெளியானது. ஒரு சராசரியான திரைக்கதையை வைத்து ரஜினி என்கிற ஸ்டார் இமேஜை வைத்து ரசிகர்களை எங்கேஜ் செய்த படம் பேட்ட. இப்படத்தின் வசூல் ரீதியான வெற்றி தான் ஃபேன் பாய் படங்களின் கலாச்சாரத்தை பூதாகரமாக்கியது என்று சொல்லலாம் .
கொரோணாவுக்குப் பின் மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் விஜயின் கில்லி படம் ரெஃபரன்ஸ்டாக இடம்பெற்றது. கோரோனா நோய்த் தொற்று பரவலில் வீட்டில் அடைந்து கிடந்த ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த ஸ்டாரை திரையரங்கில் கொண்டாடி படம் பார்ப்பது ஒரு பெரிய உணர்வெழுச்சியை கொடுத்தது . ஒரு படத்தில் ஒரு ஸ்டாரின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் வைப்பது மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற தொடங்கியது.
தி கோட் மற்றும் குட் பேட் அக்லி
கடந்த ஆண்டு வெளியான தி கோட் திரைப்படம் இந்த ஃபேன்பாய் கலாச்சாரத்தின் உச்சம் என்று சொல்லலாம். கதைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாமல் விஜய் என்கிற ஸ்டாரின் இமேஜை போற்றுவதற்காகவே இப்படி ஒரு டைட்டில் வைக்கப்பட்டது. படமும் ஒரு சராசரியான கதையில் விஜய் இதுவரை நடித்த படங்களின் மொத்த ரெஃபரன்ஸ்களை வைத்து ஓட்டியது. விஜய்க்கு மட்டும்தான் ஃபேன்பாய் சம்பவமா என்று அஜித்திற்கு தற்போது ஆதிக் வந்துள்ளார்
தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படமும் தி கோட் படத்தை விட இரு மடங்கு ரெஃபரன்ஸ்களின் தயவால் ஓடிக் கொண்டிருக்கிறது. 'கதை எல்லாம் கேட்காதீங்க.தலய பார்த்து தரிசனம் பண்ணிட்டு போங்க' என்பது அஜித் ரசிகர்களின் வாதமாக இருக்கிறது.
ஸ்டார்களின் வீழ்ச்சி
கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார் ரஜினி ஒரு பக்கா கமர்சியல் ஹிட் கொடுக்க வெவ்வேறு பாதைகளை தேர்வு செய்தார். ரஜினியின் வயது சில பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த ஸ்டார் மார்கெட்டில் சரிவதை பார்க்க விரும்புவதில்லை. அதனால் அவர்கள் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். படம் எப்படி இருந்தாலும் கதையே இல்லை என்றாலும் தங்களுக்கு பிடித்த நடிகர்களை ஸ்டாராக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்
தோற்கதான் போகிறோம் என்று தெரிந்தாலும் தோனி களத்தில் இறங்கினால் போதும் கொடுத்த காசுக்கு போதும் என்பதும் அதே மனநிலைதான். ரசிகர்களின் இந்த ஆசையை புரிந்து கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்கள் இதேபோல் ஃபேன் பாய் சம்பவங்கள் செய்யும் படங்களை கொடுத்து மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டே கல்லா கட்டும். கார்பரேட் கம்பேனிகள் கடலை மிட்டாய் தயாரிக்கும் கதைதான் இது. ஒரு பக்கம் அடுத்த தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் நடிகராக மட்டுமில்லாமல் சினிமாவில் தங்கள் பங்களிப்பை கொடுக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கண்மூடித்தனமாக ரசிகர்கள் காய்ந்து போன பசையை வைத்து தங்கள் தலைவன் போஸ்டரை ஒட்ட முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.

