கோரைக்குட்டத்தில் முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் உப்பங்கழி பகுதியில் கிடக்கும் 1100 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தைப் பாதுகாக்கவேண்டும் என தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது...,” திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் உப்பங்கழிப் பகுதியில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது. இது திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவன் அபுரார் அகமது கொடுத்த தகவலின் பேரில் 2013-ல் கண்டறியப்பட்டது.
24வது தீர்த்தங்கரர் மகாவீரர்
கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில், மூன்று சிங்க உருவங்கள் கொண்ட பீடத்தின் மீது ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். சிற்பம் இடுப்பு வரைதான் உள்ளது. மேற்பகுதி உடைந்துள்ளது. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆதலால் இது சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் என அறிய முடிகிறது. சிற்பம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
வணிகர்களால் அமைக்கப்பட்டவை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், ஆனந்தூர், மாறந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புல்லக்கடம்பனில் ஒரு கட்டுமான சமணப்பள்ளி உள்ளது. அது தவிர பிற இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான சமணப்பள்ளிகள் இருந்துள்ளன. இவை பெரும்பாலும் வணிகப் பெருவழி, சிறுவழிகளில் வணிகர்களால் அமைக்கப்பட்டதாக இருந்துள்ளன.
3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
அம்மதத்தைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில், பிற மதத்தினரால் இது உடைக்கப்பட்டிருக்கலாம். கோரைக்குட்டத்தில் முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்புல்லாணி அருகில் பொக்கனாரேந்தலில் ஒரு சிறிய தீர்த்தங்கரர் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ள இடங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய வணிகப் பாதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் இதை பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக் கொள்வதாக கூறினார்.