இனி, பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம்.. வடசென்னைவாசிகளே! உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளது.

சென்னை பெரம்பூரில் விரைவில் அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இனி, பாஸ்போர்ட்க்காக அலைய வேண்டாம்!
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் குறைந்தது ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வடசென்னைவாசிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:
சென்னையில் நேற்று (03.07.2025) செய்தியாளர்களிடம் பேசிய, விஜயகுமார், முன்பைவிட இப்போது கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பாஸ்போர்ட்களை பெறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சாதாரண விண்ணப்பங்களுக்கு தற்போது 30 நாட்களுக்குள்ளும் தட்கல் விண்ணப்பங்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். மக்களைத் தேடிச் சென்று பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தின் கீழ் அண்மையில் தொடங்கப்பட்ட நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனங்கள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.
ஒரே மாதத்தில் 1.20 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட்:
வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும் என்ற தகவல்களையும் அவர் வெளியிட்டார். பாஸ்போர்ட் வேன் சேவை முகாம்களில் பங்கேற்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள ஊர்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்படுகின்றன என்றும் அதுபோன்ற பகுதிகளில் வரும் நாட்களில் இந்த பாஸ்போர்ட் வேன் சேவை முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆர்எஃப்ஐடி (RFID) சிப் பொருத்தப்பட்டவை என்றும் இவை விமானநிலையங்களில் குடிபெயர்வு/பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்கவும் போலி பாஸ்போர்ட்களை தடுக்கவும் பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட சிப் இல்லாத பாஸ்போர்ட்களும் பிப்ரவரி 2028 வரை செல்லுபடியாகும் என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு பொதுமக்கள் தாங்களாகவே அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம் அல்லது பொது சேவை மையங்களை (சிஎஸ்சி) நாடலாம் என்று குறிப்பிட்ட அவர், தனியார் இணையதள மையங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2025 முதல் சுமார் 1.20 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், பாஸ்போர்ட் சேவையில் ஏற்படும் குறைகளையும் சந்தேகங்களையும் போக்குவதற்கு பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.





















