அடுத்தது அதிமுக ஆட்சி: தங்க நகை பூங்கா, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் - இபிஎஸ் பேசியது என்ன?
மின் கட்டணத்தில் நிலைக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என முன்வைக்கபட்டக் கோரிக்கை எங்கள் ஆட்சி அமைத்த பிறகு மாற்றி அமைக்கபடும் - எடப்பாடி பழனிச்சாமி

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் 'அடுத்த அதிமுக ஆட்சியில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும்' என இரண்டாம் நாள் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணம்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தொழில் துறையினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரின் குறைகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அதன் பிறகு அவர்களிடம் உரை நிகழ்த்தினார்.
‘’தமிழ்நாட்டில் கைத்தறி தொழிலில் அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர். அதற்காகதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
ராணுவத் தளவாட்ங்களை 5 இடங்களில் அமைக்க மத்திய அரசு முயற்சித்தது. தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணக்கம் இல்லாததால், கைவிட்டுச் சென்றுவிட்டது. நாம் ஆட்சி அமைத்து அந்த திட்டங்களை கொண்டு வருவோம்.
விவசாயிகளுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை கொடுத்தோம். தொழில், நீர்நிலைகளை எங்கள் ஆட்சியில் பாதுகாத்தோம். விமான நிலைய விரிவாக்கம் அவசியம் ஆனது. தொழில் வளர்ச்சி அதிகமுள்ள பகுதியில் விமான நிலையம் அவசியம் என்பதால் விரிவாக்கம் செய்யப்பட்டது. விவசாய நிலம் எடுப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தவன். இங்குள்ள விவசாயிகள் நிலம் கொடுக்கத் தயார், தொழில் வளர தருகிறோம் என்றார்கள். அதை அரசுக்கு கொடுக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு மனம் வேண்டும். அவர்களுக்குச் சரியான உரிய விலையை கொடுக்க அரசு அதிகாரிகளுடன் பலமுறை பேசி அதிகமான நிதி கொடுக்கப்பட்டது. 629 ஏக்கர் நிலம் விமான நிலைய விரிவாக்கம் செய்ய எடுக்கப்பட்டது. ரூ.2000 கோடி அளவுக்கு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. முறையாக, உரிய நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்சியில் விவசாய நிலம் குத்தகைக்குத்தான் கொடுப்போம் என்று முட்டுகட்டையை போட்டார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இன்று வரை அது கிடப்பில் போடபட்டுள்ளது.
பெண்களுக்கான விழாவில் கலந்துகொள்ளும்போது, சுய உதவிக் குழுக்கள் செய்யும் பொருட்களை பார்த்துவிட்ட பிறகுதான் அம்மா அவர்கள் மேடை ஏறுவார்கள். அந்தளவுக்கு சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது பற்றி கூறினீர்கள். பெண்களுக்கே குடும்பத்தின் மீது அக்கரை அதிகம் என்பதால் தான் 3 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் கொடுக்கப்பட்டது. இருசக்கர வாகனம் வழங்குவதில் வயது நிர்ணயத் தளர்வையும் கொடுத்தோம். இப்போது வந்த அரசு அதை கைவிட்டுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அத்திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.
நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்து, எதைச் செய்ய முடியும் என்பதை மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்டிப்பாக செய்துகொடுக்கப்படும். அதே அடுத்த அதிமுக ஆட்சியில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும். மூல பொருட்கள் தமிழகம் வருவதில் ஜிஎஸ்டி பிரச்சனை இருப்பது குறித்து குறிப்பிட்டீர்கள், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு அதற்கும் மாற்று வழி கண்டறிந்து செயல்படுத்தபடும். மின் கட்டணத்தில் நிலைக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என முன்வைக்கபட்டக் கோரிக்கை எங்கள் ஆட்சி அமைத்த பிறகு மாற்றி அமைக்கபடும்.
பத்திரிகையாளர் நலவாரியம் வேண்டும் என கேட்கபட்டுள்ளது. ஆனால், நமக்குச் சாதகமாக எந்த செய்தியும் போட மாட்டீர்கள்.. (கூட்டத்தில் கல கல சிரிப்பு). வீடு கட்ட ஏதுவாக சலுகை விலையில் மனைகள் விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு அதிமுக ஆட்சி அமைத்த பிறகு ஏற்படுத்தி தரப்படும். உண்மை செய்தியை வெளியிட்டால் போதும், பொய் செய்தி தேவை இல்லை. இது எங்களுடைய கோரிக்கை. அதிமுக மக்களுக்காக போராடக் கூடிய கட்சி. அதை வெளியிட்டால் போதும்’’ என்று தனது உரையை நிறைவு செய்தார்.





















