திரைக்கு வரும் முன்பே 10 விருதுகள்... சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஒரு ரீவைண்ட்!
Sivaranjiniyum Innum Sila Pengalum: காலத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சமூகத்தால் மாற்றம் வராது அல்லது சுற்றியிருப்பவர்கள் வரவிடமாட்டார்கள் என்பதை பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார்கள்!
தேசிய விருதை பெற்றிருக்கிறது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். வெளியாகும் முன்பே சாதனைகளை பெற்ற இந்த திரைப்படத்திற்கு பல சிறப்புகளும், கதாபாத்திரங்களுக்கு கனமான பின்னணியும் உள்ளது. இதோ அவை....
இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை தழுவி இந்தப் படம் உருவாகியிருக்கிறது. திரைக்கு வரும் முன்னதாகவே இந்தியா முதல் சர்வதேச விருதுகள் என 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறது.
பெண்களின் வலியை பேசும் படங்கள் தமிழில் வருவது அவ்வப்போது நடந்தாலும் சமீபகாலங்களில் பெண்களை மையப்படுத்திய கதைகளின் வரவு சமீபத்தில் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான விஷயமே. வசந்த்தும் அந்த ஜானருக்குள் சென்றிருக்கிறார். ஆனால் வேறு விதமாக சென்றிருக்கிறார்.
ஆர்ப்பாட்டம் இல்லை, கத்தி பேசும் வசனங்கள் இல்லை. யதார்த்தத்தை மீறாமல் மிக இலகுவாக காட்சிகளை நகர்த்தி செல்வது தனக்கு கை வந்த கலை என்பதை வசந்த் இந்தப் படத்திலும் ஆழமாக நிரூபித்திருக்கிறார்.
1980, 1995, 2007 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் வாழும் சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி என்ற மூன்று பெண்களையும், அவர்கள் சந்திக்கும் அடக்குமுறைகளையும் பேசியிருக்கிறார்.
கணவனுக்காக அப்பளத்தை கடனாக வாங்கும் சரஸ்வதியில் தொடங்கி தன் குடும்பத்துக்காக தன் கனவுகளை விட்டுக்கொடுக்கும் சிவரஞ்சனியில் முடிகிறது படம். ஆனால் அதில் வசந்த் செய்திருப்பது நிச்சயம் சினிமாவின் புதிய பரிமாணம்.
1980 சரஸ்வதி:
சரஸ்வதியைப் பொறுத்தவரை கணவரால் ஏகப்பட்ட உளவியல் தாக்குதல்களையும், உடல் ரீதியான தாக்குதலையும் சந்திப்பவள். இப்போது வேண்டுமானால் தனக்கு ஒருவருடன் வாழ பிடிக்கவில்லை என்றால் இருவரும் மனம் ஒத்து பிரிவது எளிதான விஷயம். ஆனால் 1980களில் அது ஒரு கொலை குற்றமாகவே பார்க்கப்பட்டது.
கணவனோடு இருந்தால்தான் பெண்களுக்கு மரியாதை என்ற மாய பிம்பம் தழைத்தோங்கி இருந்த காலக்கட்டம் அது. அந்த பிம்பம் இதில் சர்வசாதாரணமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
பல ஆண்கள் தங்களது வேலை குழந்தையை உருவாக்குவதோடு முடிந்துவிட்டது. இனி எல்லாம் குழந்தையின் தாய் பார்த்துக்கொள்வாள் என்றே எண்ணிக்கொள்கின்றனர். ஆண்களின் அந்த குரூரமான எண்ணத்தை வசந்த் மிக ஆழமாகவே சரஸ்வதியை வைத்து சொல்லியிருக்கிறார்.
ஆணின் அதிகாரம் எப்போதும் மேலிருந்து கீழே இறங்காது என்பதுதான் உண்மை. அந்த அதிகாரத்தனத்தை ஒருவர் எதிர்த்துவிட்டால் அதுவும் ஒரு பெண் எதிர்த்துவிட்டால் அந்த ஆண் எவ்வளவு பெரிய கோழையாக மாறுவான் என்பதை ஒரு ஆணாக இருந்துகொண்டு வசந்த் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.
1997 தேவகி:
ஐந்தறிவு கொண்ட உயிரானாலும், ஆறறிவு கொண்ட உயிரானாலும் ஒரு உயிருக்கு ப்ரைவேசி மிக மிக முக்கியம். 1997ஆம் ஆண்டு வாழும் தேவகிக்கும் அது தேவைப்பட்டது. ஆனால் அது அவளது கணவரின் குடும்பத்திற்கு தேவையில்லாததாக தோன்றியது.
கணவருக்கு முன் மனைவி சரிசமமாக அமர்வதையே பாவமாக பார்க்கப்பட்ட காலக்கட்டத்திலிருந்து கணவரின் பெயரை சொல்லி அழைக்கும் நிலைக்கு ஒரு பெண் வந்திருப்பது சுதந்திரம்தானே என்றால் அது மிகவும் தவறான பார்வை. பெயர் சொல்லி அழைப்பது ஒன்றும் அதிசயம் இல்லை. அழைப்பதற்காகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இதில் தேவகி தனது கணவரை பெயர் சொல்லித்தான் அழைப்பாள். ஆனால் அவளுக்குரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் இல்லை. அதை மிகவும் நுட்பமாக கூறியிருக்கிறார் வசந்த். அந்த சுதந்திரம் அவளுக்கு இல்லை என்பதை பக்கம் பக்கமாக வசனம் எழுதாமல், அடுக்கடுக்கடுக்காக காட்சிகள் வைக்காமல் ஒரே காட்சியில், இரண்டு வரி வசனங்களில் உடைகளை வைத்து தேவகியின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.
மிக முக்கியமாக ஒரு பெண் எவ்வளவு படித்து என்ன வேலைக்கு சென்றாலும் அவள் உடுத்தும் உடை அவளுக்கு பிடித்து உடுத்தப்படவில்லை. அது, தான் புகுந்த வீட்டுக்காக உடுத்தப்படுகிறது என்பதை போகிறபோக்கில் ஒரு காட்சியில், சில வரி வசனங்களில் ஒரு இயக்குநரால் எப்படி சொல்ல முடிந்தது என்பது ஆச்சரியமே.
குறிப்பாக, “கணவன் மனைவி எடுத்துக்கொண்ட எந்த ஃபோட்டோவ பார்த்தாலும் ஆம்பளைங்க உட்கார்ந்து இருக்கிங்க பொம்பளைங்க நின்னுட்டு இருக்கோம் ஏன் எங்களுக்கெல்லாம் கால் வலிக்காதா?”என்ற தேவகியின் கேள்விக்கு எந்த ஆணிடமும் பதில் இல்லை.
தேவகி கதையில் லொக்கேஷன், வீட்டை சுற்றி விதைக்கப்பட்ட எலுமிச்சை, கொய்யா மரங்கள், வீட்டு வாசலிலேயே விளையாடப்படும் மினி கிரிக்கெட் என மேக்கிங்கிலும், டீட்டெயிலிங்கிலும் அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர்.
தொழில்நுட்பம் கம்மியாகவும், மனிதர்கள் அதிகமாகவும் உலாவிய காலக்கட்டம் 90கள். நமக்கு வேண்டியதை, நாம் கேட்காததை நாம் எதிர்பாராத நேரத்தில் செய்துகொடுக்கும் உறவுகள் சூழந்திருந்த காலம் அது.
ஆனால் அந்த உறவுகள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கான பதில் நம்மில் பலபேருக்கு தெரியாது. அந்த தொலைந்துபோன உறவுகளை தேடவும், குடும்பத்துக்காக பெண்கள் தொலைத்த உணர்வுகளையும் தேட சொல்லியிருக்கிறார் வசந்த்.
2007 சிவரஞ்சனி:
ஒருவருடைய லட்சியமும், கனவும் அவராலேயே நிறைவேறாமல் போனால் அதைப் பற்றி பேசாமல் விட்டுவிடலாம். ஆனால் அது நிறைவேறாததற்கு மற்றவர்கள் காரணம் என்றால் அவர்களை கொலை குற்றவாளிகள் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.
சிவரஞ்சனியின் குடும்பமும், கணவரும் அந்தக் கணக்கில்தான் வருவார்கள். ரஞ்சனியின் கால்கள் ஓட நினைத்த தூரங்கள் அதிகம், அடைய நினைத்த இலக்குகள் நிறைய. ஆனால் அவளது கால்கள் அப்பார்ட்மெண்ட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கணவரின் வெள்ளை சட்டைக்காக லாண்டரி கடைவரைக்கும், பெட்ரூமிலிருந்து கிச்சன், ஹால் என வீட்டுக்குள்ளும், வீட்டை சுற்றியுமே ஓடிக்கொண்டிருப்பதை காணும்போது நிச்சயம் பார்ப்பவர்களின் மனதில் கனம் ஒன்று உருவாகும்.
தன் குழந்தையின் அன்றைய நாளுடைய முதல் பாட வகுப்பிலிருந்து கணவரின் எல்ஐசி ரெசிப்ட்வரை ரஞ்சனியின் கால்களும், சிந்தனையும் அந்த வீட்டுக்குள்ளேயே அவர்களை சுற்றியே முடக்கப்பட்டிருக்கும்.
ஒரு இடத்தில் ரஞ்சனியின் கால்கள் வீட்டை விட்டு வெளியே தன் குழந்தையின் உணவுக்காக ஓடும். அந்த ஓட்டத்தின் முடிவில் ரஞ்சனிக்கு எழும் கைத்தட்டல்கள் அவளின் அத்தனை கால தாகத்தை தீர்த்து வைக்கும்.
குறிப்பாக சிவரஞ்சனியின் ஏக்கத்தையும், அவளின் தொலைந்துபோன கனவு அவளுக்கு மீண்டும் ஞாபகத்திற்கு வந்ததையும் வசந்த் மைதானத்தில் வைத்து ஒரு ஷாட்டில் கூறியிருப்பார். காட்சிகள் மூலம் கதை சொல்வதில் தன்னை மிஞ்ச இங்கு இப்போது ஆளில்லை என்பதை சிவரஞ்சனி கதையில் மிக மிக தெளிவாக உணர்த்தியிருக்கிறார் வசந்த்.
அதுமட்டுமின்றி தன்னுடைய ரிதம் படத்தில் இடம்பெற்ற “நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே” பாடலை சிவரஞ்சனியின் கதையில் வைத்திருப்பது வசந்த்தின் க்ளாஸ் டச்.
இப்படி, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் பல விஷயங்களை பேசியிருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,
காலத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சமூகத்தால் மாற்றம் வராது அல்லது சுற்றியிருப்பவர்கள் வரவிடமாட்டார்கள் என்பதை பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார்கள் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!