Shruthi Haasan Pongal | "விசாலம் அம்மா...தமிழ்நாட்டு சாப்பாடு.. பொங்கல் தெருக்கள்.." பொங்கல் மெமரீஸ் சொன்ன ஸ்ருதிஹாசன்..
தனது குழந்தைப் பருவத்தின் போது சென்னையின் தெருக்களில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதே, பொங்கல் பண்டிகை குறித்த தன் இனிமையான நினைவுகள் என நடிகை ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தைப் பருவத்தின் போது சென்னையின் தெருக்களில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதே, பொங்கல் பண்டிகை குறித்த தன் இனிமையான நினைவுகள் என நடிகை ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மும்பையில் கொண்டாடவுள்ள நடிகை ஷ்ருதி ஹாசன், பொங்கல் பண்டிகை என்பதே நல்ல உணவையும், நல்ல உணர்வையும் அளிக்கும் ஒன்று எனவும் கூறியுள்ளார்.
`நான் அவ்வளவாகப் பண்டிகைகளைக் கொண்டாடும் நபர் அல்ல. கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய இரு பண்டிகைகளை மட்டுமே நான் கொண்டாடியுள்ளேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை; ஆனால் எப்போதுமே இப்படியே இருந்திருக்கிறது’ எனக் கூறுகிறார் ஷ்ருதி ஹாசன்.
பொங்கல் பண்டிகை குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நடிகை ஷ்ருதி, `என்னைப் பொருத்த வரையில், சென்னையில் பொங்கல் என்பது எனது விசாலம் அம்மாவின் வீட்டிற்குச் செல்வது. அவர் எனக்கு பாரம்பரிய தமிழ் உணவு விருந்து பரிமாறுவார். ஒவ்வொரு ஆண்டும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளேன். நான் பணியாற்றத் தொடங்கும் வரை இந்த வழக்கம் நீடித்து வந்தது. ஆனால் பணியின் சுமை காரணமாக என்னால் இப்போது செல்ல முடிவது இல்லை. தமிழ்நாட்டில் வளர்ந்த எனக்குப் பொங்கல் என்பது இந்த நினைவுகளோடு தொடர்புடையது’ என்று கூறியுள்ளார்.
அறுவடைத் திருநாளான பொங்கல் என்பது அவருக்கு நேர்மறையான விவகாரங்களையும், நல்ல ஆற்றலையும், சிறந்த உணவையும் நினைவூட்டுவதாகவும், இவையே பிறருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மூலம் நிகழ வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன்.
`நல்ல ஆரோக்கியமும், செழிப்பான வாழ்க்கையையும் இந்த ஆண்டு தரட்டும் என விரும்புகிறேன். அறுவடை என்பது பல்வேறு விவகாரங்களுக்குப் பொருந்தும். இதுபோன்ற பழமையான பண்டிகைகளும், பாரம்பரியமும் இன்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஷ்ருதி ஹாசன், `அறுவடை என்பது சிந்தனையைக் குறிக்கலாம்.. பலருக்கும் அவர்களது வியாபாரத்தைக் குறிக்கலாம். இந்தப் பெருந்தொற்று காலத்தில், நாம் மனிதர்களாக மிகவும் பலம் மிக்கவர்கள் இல்லை என்பதை உணர்ந்திருந்தாலும், அதனால் துவண்டுவிட முடியாது. எனவே இந்தப் பண்டிகையின் போது நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நேர்மறையான சிந்தனை ஆகியவற்றை விரும்புகிறேன். பெருந்தொற்று காலத்தில் நமக்கு அதிகம் தேவைப்படும் மூன்று பொருள்களும் இவை மட்டுமே!’ எனக் கூறி முடித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை இதோ...
Also Read | Pongal 2022 Wishes: தமிழில் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்… ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வாழ்த்து அட்டைகள்!