அடுத்த சூப்பர் அறிவிப்புங்கோ... திருச்சியில் இருந்து.. விரைவில் வரப்போகும் அறிவிப்பு
இதன் தொடர்ச்சியாக விரைவில் டெல்லிக்கும் ஏர் இந்தியா விமான சேவையானது இயக்கப்பட இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி விமான நிலைய சேவைகள் விரிவடைந்து கொண்டே வருகிறது. விரைவில் டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமான சேவையானது இயக்கப்பட்டது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக விரைவில் டெல்லிக்கும் ஏர் இந்தியா விமான சேவையானது இயக்கப்பட இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி விமான நிலைய மேம்பாட்டுக் கோரிக்கையுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
திருச்சி - டெல்லி நேரடி விமான சேவைக்கான ஸ்லாட் (slot) வழங்கிட வேண்டி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன். கடந்த 01.07.2024 அன்று அமைச்சரைச் சந்தித்து நான் முன்வைத்த அதே கோரிக்கையை அவருக்கு நினைவுபடுத்தியதோடு, கடந்த பிப்ரவரி 14 அன்று டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அலுவலகத்தில் அவர்களின் உயரதிகாரிகளைச் சந்தித்து, திருச்சி - டெல்லி நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதையும் நான் தெரிவித்தேன்.
இதையேற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சியிலிருந்து நேரடி விமான சேவையைத் தொடங்கத் தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டி, அந்தச் சேவைக்கு தேவையான இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒதுக்கப்பட வேண்டிய ஸ்லாட்டை (slot) விரைவாக உறுதிப்படுத்தித் தரும்படி அமைச்சரிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
திருச்சி - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவையால், திருச்சி கட்டமைப்பு வளர்ச்சியில் மேலும் மேம்படுவதோடு, அதைச் சுற்றியுள்ள 11 மத்திய மாவட்டங்களும் பயனடையும் என விளக்கி கூறினேன். உடனே, டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலைய முக்கிய அதிகாரிகளை செல்போன் அழைத்துப் பேசினார்.
ஏற்கனவே இந்த ஸ்லாட்டு குறித்து கோரி இருந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, இந்த மாதத்திற்குள்ளாகவே ஸ்லாட் வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக அவர் வலியுறுத்தினார். மனநிறைவோடு அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விடைப்பெற்றேன். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ பதிவிட்டுள்ளார்.
திருச்சி விமான நிலையம் தற்போது தனது சேவைகளை பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் திருச்சி மட்டுமின்றி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட சுற்றுப்பகுதி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மிக முக்கியமான பயண வசதி என்றால் அது திருச்சி விமான நிலையம்தான். தற்போது வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டு சேவைகளையும் விரிவாக்கம் செய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த 22-ந் தேதி அன்று திருச்சி - சென்னை விமான சேவையை தொடங்கி வைத்தது. அதேபோல் மிக விரைவில் திருச்சி - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு டெல்லிக்கு விமான சேவை தொடங்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















