Andhra CM: நாட்டின் பணக்கார முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி! ரூ.750 கோடியை கடந்த குடும்ப சொத்து மதிப்பு
Andhra CM: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் (Jagan mohan Reddy) சொத்து மதிப்பு, 529 கோடி ரூபாய் என அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andhra CM: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பணக்கார முதலமைச்சர்:
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, அந்திராவில் மக்களவையுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் நாட்டின் பணக்கார முதலமைச்சராக கருதப்படுகிறார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு:
வேட்புமனுவில் உள்ள விவரங்களின்படி, ஜெகன் மோகனின் மொத்த சொத்து மதிப்பு 529 கோடியே 50 லட்சம் ஆகும். அதேநேரம், கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது சொத்து மதிப்பை 375 கோடியே 20 லட்சம் என அவர் அறிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஜெகனின் சொத்து மதிப்பு 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் தனது பல்வேறு நிறுவன முதலீடுகள் மூலம், 57 கோடியே 75 லட்சம் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பணக்கார முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி திகழ்கிரார்.
குடும்ப சொத்துகள் விவரம்:
இதனிடையே, ஜெகன் மோகன் மனைவி பாரதி ரெட்டியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 124 கோடியிலிருந்து 176 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆந்திர முதலமைச்சரின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு 757 கோடியை எட்டியுள்ளது. அவர்களது இரண்டு மகள்களான ஹர்ஷினி மற்றும் வர்ஷா ஆகியோர் மீது முறையே, ரூ.24.26 கோடி மற்றும் ரூ.23.94 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
அசையும் , அசையா சொத்துகள்:
பாரதி சிமென்ட், கார்மர் ஏசியா, கிளாசிக் ரியாலிட்டி, ஹரிஷ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், சந்தூர் பவர், சரஸ்வதி பவர் & இண்டஸ்ட்ரீஸ், சிலிக்கான் பில்டர்ஸ் போன்ற நிறுவனங்களில் ரூ.263.64 கோடி முதலீடு என, மொத்தம் ரூ.483.08 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளை ஜெகன் கொண்டுள்ளார். சண்டூர் பவர், சரஸ்வதி பவர் & இண்டஸ்ட்ரீஸ், கீலான் டெக்னாலஜிஸ், கிளாசிக் ரியாலிட்டி மற்றும் ஆகாஷ் எஸ்டேட்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பாரதி ரெட்டியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.119.38 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தங்களிடம் சொந்தமாக கார் இல்லை எனவும், வேறு ஒரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட குண்டு துளைக்காத ஸ்கார்ப்பியோ காரை பயன்படுத்துவதாகவும் இந்த தம்பதி தெரிவித்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் அசையா சொத்து மதிப்பு ரூ.46.78 கோடியாகவும், அவரது மனைவியின் அசையா சொத்து மதிப்பு ரூ.56.92 கோடியாகவும் உள்ளது. இவர்களது மகள்களுக்கு தலா ரூ.1.63 கோடி அசையா சொத்துக்கள் உள்ளன. குடும்பத்தின் மொத்த கடன்கள் ரூ.26.55 கோடி. அரசியல் மற்றும் பொது சேவையை தனது தொழிலாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குற்றவழக்குகள்:
தொடர்ந்து மூன்றாவது முறையாக கடப்பா மாவட்டம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடும் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 26 கிரிமினல் வழக்குகள் தனக்கு எதிராக நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.